கப்பல்களுக்கு பெயர் சூட்டலைத் தொடர்ந்து அமெரிக்க டாலர்களிலும் டிரம்ப் கையெழுத்து!
வாஷிங்டன், மார்ச் 27 - அமெரிக்காவில் இதுவரை புழக்கத்தில் இருக்கும் கரன்சி (டாலர்) நோட்டுகளில் அந்நாட்டின் கருவூலச் செயலர் மற்றும் கருவூலப் பொருளாளர் ஆகியோரின் கையெழுத்து மட்டுமே இடம்பெறுவது மரபாக இருந்து வந்தது. ஆனால், இனி அச்சிடப்படும் டாலர் களில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கையெழுத்தும் பொறிக்கப்பட உள்ள தாக அமெரிக்க கருவூலத் துறை அறி வித்துள்ளது. அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலை யில், இம்மாத தொடக்கத்தில், டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயம் வெளியிடப்பட்டது. இதன் அடுத்த நடவடிக்கையாக, அமெரிக்க டாலர்களில் டிரம்ப் கையொப்பம் பொறிக்கப்படுகிறது. அமெரிக்காவின் செலாவணியான டாலர், 1861-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் கையொப்பம் கரன்சியில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில், நாட்டின் கலாச்சார அடையாளங்களாகத் திகழும் அமெரிக்க அமைதி நிறுவனம் மற்றும் கென்னடி கலை மையம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றிய டிரம்ப், புதிய வகை போர்க் கப்பல்களுக்கும் தனது பெயரைச் சூட்டிக் கொண்டார். தற்போது கரன்சிகளிலும் தனது பெயரைப் பொறிக்கும் வேலையில் இறங்கியுள்ளார். அமெரிக்க கரன்சித் தாள்களில் டிரம்ப் கையெழுத்திடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டிரம்ப் ஒரு கொடுங்கோல் மன்னரை போல செயல்பட்டு வருவதாக அமெரிக்கர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.