tamilnadu

img

செம்பனார்கோவில், செம்பதனிருப்பு பகுதிகளில் செங்கரும்புகள் அறுவடை பணி தீவிரம்

மயிலாடுதுறை, ஜன.10 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் செம்பதனிருப்பு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்புகள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பண்டிகைகள் வந்தாலும் தமிழர்கள் மதங்களை கடந்து அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன், ஒற்றுமையாய் ஒன்றுகூடி கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெறும் விழாவாக இல்லாமல் உணர்வோடு கலந்த திருவிழாவாகும். இயற்கையை, உழைப்பை, உழைப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவும் மாடுகளையும் கொண்டாடும் 4 நாள் பண்டிகையான இந்த பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது “செங்கரும்பு”. இதை பொங்கலுக்கு பயன்படுத்துவதால் பொங்கல் கரும்பு என்ற பெயரும் அக்கரும்புக்கு உண்டு. அந்த வகையில் செம்பனார்கோவில் மற்றும் செம்பதனிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள், செங்கரும்பு சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்னும் 2 நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கரும்புகளை, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.  இதுகுறித்து செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், “பொங்கல் பண்டிகையையொட்டி நடப்பு ஆண்டு சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் செங்கரும்பு சாகுபடி செய்தோம். பொதுவாக கரும்பு பயிரை மணல் பாங்கான பொன்செய் நிலத்தில் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செங்கரும்புகளை அறுவடை செய்து வருகிறோம். இந்த செங்கரும்புகள் கட்டுகளாக கட்டப்பட்டு விற்பனை செய்து வருகிறோம்.  தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அதனை பொருட்படுத்தாமல் செங்கரும்புகள் அறுவடை செய்து வருகிறோம். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை என்பதால் விரைந்து அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளோம். செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். எனவே விவசாயிகள் லாபம் பெறும் வகையில் செங்கரும்புக்கு உரிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். அறுவடை முடிந்த பின்னர் நிலக்கடலை, மரவள்ளி கிழங்கு, மிளகாய், கொத்தவரங்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்வோம்” என்றனர்.