tamilnadu

img

அண்ணாமலையும் சீமானும் அறிவுநாணயம் அற்றவர்கள் - மதுரை சொக்கன்

ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் இரண்டு நடவடிக்கைகள் தமிழகத்திற்கு பேராபத்தை உருவாக்குவதாக உள்ளன. ஒன்று மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளிக்கப்பட்ட அனுமதி. மற்றொன்று தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து மாநில அரசுகளை முற்றாக விலக்கி வைத்து ஆளுநர் மட்டுமே அந்தக் குழுக்களை தேர்வு செய்வார் என்பது. இந்த இரண்டு நடவடிக்கைகளையும் எதிர்த்து தமிழகம் கொதிநிலையை எட்டியுள்ளது. ஆனால் இதை மடைமாற்று வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இரட்டை தவில் போல உருட்டி வருகின்றனர். தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறு பரப்பி வருகிறார். அவரை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெரியார் பேசியது குறித்து ஆதாரங்களை தரத் தயார். ஆனால் அதை பொதுவெளியில் தரமாட்டேன். சீமானிடம் தனியாகத்தான் தருவேன் என்கிறார் அண்ணாமலை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல அவருக்கு ஆதாரம் தர இவர் புறப்பட்டிருக்கிறார். பெரியார் பேசியதை முழுமையாக வெளியிட்டால் கதை நாறிப்போகும் என்பதால்தான் அடக்கி வாசிக்கிறார். பெரியார் பேசியதை முன்னும் பின்னும் வெட்டி ஒட்டி சீமானும், அண்ணாமலையும் மேஜிக் வேலை காட்டி வருகின்றனர்.

பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவருடைய கருத்துக்களில் விமர்சனத்திற்குரியவை உண்டு. அவரே கூட நான் சொல்வதற்காக எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி உண்மையை கண்டறியுங்கள் என்று தான் கூறியிருக்கிறார். சீமானும் அண்ணாமலையும் செய்வது விவாதம் அல்ல. வேண்டாத விதண்டா வாதம். தமிழக மக்கள் சந்திக்கிற பிரச்சனையை திசைதிருப்பி விடுகிற திருகல் வேலை.  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக, பாமக போன்ற கட்சிகள் கூட இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ஆனால் பாஜக வெளிநடப்பு செய்து தன்னுடைய தமிழ்நாடு விரோதப் போக்கை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் பேசிய நயினார் நாகேந்திரன், யுஜிசியின் அறிவிப்பு குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்காமலேயே, பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுவரை மக்கள் கருத்துக்கு எந்த விசயத்திலாவது பாஜக மரியாதை கொடுத்தது உண்டா? அவர்களைப் பொறுத்தவரை கருத்துக் கேட்பு என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கைதான். புதிய கல்விக்கொள்கை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என பல்வேறு பிரச்சனைகளில் கருத்துக்கேட்பதாக நாடகம் நடத்துவார்கள். கடைசியில் அவர்கள் எழுதி வைத்துள்ள கிளைமாக்ஸ் காட்சியையே அரங்கேற்றுவார்கள். தாங்கள் நடத்தும் நாடகத்தில் எல்லோருமே ஒரு பாத்திரமாக மாறிவிட வேண்டும் என பாஜக கருதுகிறது. 

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட போது, அவர் ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார். நல்லவேளை சாட்டையை எடுத்து தன்னைத்தானே அடித்துக் கொள்ளவில்லை. யுஜிசி அறிவிப்பு குறித்து கேட்டால்  அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏன் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்று கேட்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்தவுடன் முதலில் களத்தில் நின்றது இந்திய மாணவர் சங்கம். மாணவிகளின்  பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளன. பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு விசயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது.  ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களும், சிறுமிகளும் எத்தகைய கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் பெண்கள்  குறித்த மிக இழிவான பார்வையைக் கொண்டுள்ள மனுஅதர்மத்தை நாட்டின் அரசியல் சட்டமாக மாற்றிவிட முயன்ற கூட்டத்தின் தொடர்ச்சிதான் பாஜக.  இதுஒருபுறமிருக்க, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சூரப்பா என்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தப் பல்கலைக்கழகத்தையே ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துவிட சதித் திட்டம் தீட்டினார். மாநில அரசு நிதியே தேவையில்லை. ஒன்றிய அரசே இந்தப் பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொள்ளட்டும் என்றார் ஆளுநருக்கு  ஆட்காட்டி வேலை பார்த்த சூரப்பா. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க  இவர் யார்? தேனடையை திருட முயன்ற திருட்டு நரிபோலத்தான் சூரப்பாவின்  நடவடிக்கை இருந்தது. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் பாய்ந்தது என்பது தனிக்கதை. 

அன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை ஆட்டையைப் போட முயன்று தோற்றவர்கள் இன்றைக்கு அப்படியே சாப்பிடுவேன் என்பது போல அத்தனை பல்கலைக்கழகங்களையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே யுஜிசி மூலம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ள னர். இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்று நயினார் நாகேந்திரனைப் போலவே அண்ணாமலையும் வார்த்தையாடுகிறார். ஆனால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று சொல்வதற்கு இவர்கள் தயாராக இல்லை.  டங்ஸ்டன் பிரச்சனையை மாநிலத்தின் முடிவுக்கே ஒன்றிய அரசு விட்டுவிட்டது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக அரசு இந்தத் திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என்று தெளிவாக அறிவித்துவிட்டது. அப்படியென்றால் கடையைக் கட்டிக் கொண்டு போகவேண்டியதுதானே? தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை பலிகொண்ட அவக்கேடான வேதாந்தா நிறுவனத்தை மேலூர் பகுதிக்கு வெற்றிலை  பாக்கு வைத்து அழைத்து வந்தது ஒன்றிய பாஜக அரசுதான். வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்க முடியாது என்று அந்தப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் போர்க்களம் புகுந்திருக்கிறார்கள்.  இதையெல்லாம் திசை திருப்பத்தான் பெரியார் பிரச்சனையை சீமான் மூலமாக கிளப்பிவிடுகிறது பாஜக. சீமான் போன்றவர்கள் அவ்வப்போது அரசியல் உலகில் மலிவுவிலைக்கு கிடைப்பார்கள்.  ஏவிவிடுபவர்களின் ஏவலுக்கு ஏற்ப பாய்ந்து பிடுங்குவதே இவரது பாணி. இவர் யாரைப் புகழ்கிறாரோ  அவரை விரைவிலேயே இகழ்வார். எங்கள் சந்ததிப் பாட்டன் சாவர்க்கர் என்றும்  குலப்பாட்டன் கோல்வால்கர் என்றும் இவர் குதியாட்டம் போடமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவரது கடந்த கால வரலாறு அப்படி. சீமானும் அவரது சீட கோடிகளும் தரையில் வேர் பிடிக்காத தண்ணீர் தாவரங்கள். வெற்றுச் சவடால் மூலம் விளம்பர வெளிச்சம் தேடுபவர்கள்.   அவருக்கு ஆதாரம் தரத் தயாராக இருப்பதாக அண்ணாமலை கூறுகிறார் என்றால் தமிழ்நாட்டையும் கெடுக்கத் துடிக்கும் அவரைப் போன்றவர்களுக்கு பாஜகதான் ஆதாரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.