புகையில்லா போகி: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை, ஜன.10- போகி பண்டிகையின் பொழுது இயற்கையிலான பொருட்களை எரிப்பதன் மூலம் காற்று மாசு ஏற்படவில்லை ஆனால் தற்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதினால் காற்று மாசு ஏற்படுகின்றது அதனை செய்ய வேண்டாம் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப் காகிதம் ரசாயனம் கலந்த பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை எரிப்பதினால் காற்று மாசு ஏற்படுகின்றது. நச்சு வாய்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறால், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றது. டயர் டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் அந்த வகையில் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி
சென்னை, ஜன.10- சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடியில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை ரூ.625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69 லட்சத்தில் 82 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில் அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடியில் புயலால் சேதமடையாத வகையில் சென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையம், குப்பையை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டு பலகைகள், மீன் கழிவுநீரை பயோ டைஜிஸ்ட் கட்டமைப்புக்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால், வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள கடைகள் ஒவ்வொன்றும் 25 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு சதுர அடிக்கு மாத வாடகை ரூ.25 என ஒரு கடைக்கு ரூ.625 நிர்ணயித்துள்ளது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
பழவேற்காடு மீனவர்களின் படகு கவிழ்ந்து இரண்டு மீனவர்கள் மாயம்
திருவள்ளூர், ஜன.10- பழவேற்காட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் பிடித்து விட்டு முகத்துவாரம் பகுதியில் வரும்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வைரவன் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் தட்சிணாமூர்த்தி,மணிபாலன்,செல்வம்,மோகன் மற்றும் அரங்கம் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் அப்பு ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரண்டு நாட்களாக மீன்பிடித்து விட்டு மூன்றாவது நாளான வெள்ளியன்று (ஜன 10), கரையை நோக்கி வரும்போது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது.இதில் படகில் இருந்த செல்வம், மோகன் ஆகியோர் மாயமான நிலையில் தட்சிணாமூர்த்தி,மணிபாலன் அப்பு ஆகியோர் தப்பித்து கரை சேர்ந்தனர். தகவல் அறிந்து கிராம மக்கள் படகுகள் மூலம் அங்கு சென்று கவிழ்ந்த படகினையும் மீன்பிடி உபகரணங்களையும் கரை சேர்த்தனர். மேலும் காணாமல் போன இருவரையும் கடலில் தேடி வருகின்றனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு படகுகள் மூலம் விரைந்து சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானங்களின் நேரம் மாற்றி அமைப்பு
சென்னை, ஜன.10- போகிப் பண்டிகை அன்று சென்னையில் காலை நேரத்தில் வருகை, புறப்பாடு விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. துபாய், கோலாலம்பூர், மஸ்கட் விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். விமான நேரங்கள் மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள்
காஞ்சிபுரம், ஜன.10- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட விரிவடைந்த மாவட்டக்குழு கூட்டம் ஜன.10 வெள்ளிக்கிழமை என்.சாரங்கன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலதுணைத் தலைவர் பி.டில்லிபாபு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ். ஆனந்த், மாவட்டச் செயலாளராக என். சாரங்கன், பொருளாளராக கே. செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு நிலத்தை தனிநபருக்கு தாரைவார்த்தது தடுத்து நிறுத்தம் கோட்டாட்சியருக்கு சிபிஎம் பாராட்டு
திருவள்ளூர், ஜன.10- பாதிரிவேடு ஊராட்சிக்கு சொந்தமான அரசு நிலத்தை தனி நபர்கள் பட்டா பெற்றது செல்லாது எனவும், அந்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என பொன்னேரி கோட்டாட்சியர் உத்தர விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரி வேடு ஊராட்சிக்கு சொந்தமான ராமைய்யா மடம், ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்களை கொண்டு பட்டா வழங்கியதை ரத்து செய்து, அந்த நிலத்தை ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் சார்பில் கடந்த செப் 10 அன்று கும்மிடிப்பூண்டியில் மண்டல துணை வட்டாச்சியரிடம் மனு அளித்துள்ளனர். பாதிரிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராமைய்யா மடம் தெருவில் சர்வே எண் 157/4 ல் 21 சென்ட் நிலம் ஏறக்குறைய ரூ.2 கோடி மதிப்புள்ள அரசு நிலம் உள்ளது. இதனை மாநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் நேமளூர் என்.எஸ்.நகரை சேர்ந்த மனோகரன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து, அரசியல் பின்புலத்துடன் போலி ஆவணங்கள் தயார் செய்து தங்கள் பெயருக்கு கூட்டு பட்டா பெற்றுள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் பெற்றப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து ஊராட்சி யில் அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்ற குணசேகரன் மற்றும் மனோ கரன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாச்சியர் பாரதியிடம் மனு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டதில் கிராம கணக்கு “அ” பதிவேட்டில் அரசு புறம்போக்கு கிராம நத்தம் கிணறு என்று பதிவாகியுள்ளது. கணினி பட்டா-வில் நிலமாக பதிவேற்றம் செய்ததற்கான உத்தரவு நகல் ஏதும் கிராம கணக்கில் பதிவு செய்யப்பட்டவில்லை என விசாரணை மற்றும் ஆவணங்கள் படி தெரிகிறது. இதனால் கிராமத்திற்கு சொந்தமான பொது இடம் என தெரிகிறது. கிராம நத்தம் கிணறு என பழைய நிலையில் நிலை நிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க கும்மிடிப்பூண்டி வட்டாட்சியருக்கு, பொன்னேரி கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் வரவேற்றுள்ளனர். மேலும் போலி யான ஆவணங்கள் மூலம் பெற்ற பட்டாவை ரத்து செய்ய வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீதும், போலியான ஆவணங்கள் மூலம் பட்டா பெற்ற நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.