திருவள்ளூர், ஜன.10- கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை யில் பணியாற்றும் 141 தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வாங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் வெள்ளியன்று (ஜன.10) காட்டுப் பள்ளியில் உள்ள ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு சொந்தமான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐவிஆர்சிஎல் என்ற தனியார் நிறுவனம் இந்த திட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறு வனம் துவங்கி 14 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரை தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீரை சென்னை மக்க ளுக்கு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்த மாகும். இந்நிறுவனத்தில் 15 பெண்கள் உட்பட 141 தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. யார் அடுத்த ஒப்பந்ததாரரோ அவர்களிடம் இந்த தொழிலாளர்களை ஒப்படைக்கும் மோச மான நிலை தான் உள்ளது. இந்த தொழிற்சாலை சரியாக இயங்காததால் நாள் ஒன்றுக்கு வெறும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரைதான் வழங்கி வந்தது. ஐவிஆர்சிஎல் என்ற நிறுவனத்தால் நடத்த முடியாமல் வேறு முதலீட்டாரை தேடி வருகிறது. இந்த சூழலில் தொழிலை நடத்த முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக ஆலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 141 தொழி லாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ்நாடு அரசு இதை வேடிக்கை பார்க்காமல் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் என்பதால், இந்த நிறுவனத்திற்கு நிலம், குறைந்த விலையில் மின் கட்டணம் கொடுத்த பிறகும் ஆலையை நடத்த முடியவில்லை என்கிறார்கள். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு, சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகமே இதனை ஏற்று நடத்த வேண்டும். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ஆலையை திறக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய பாக்கியை வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு மீஞ்சூர் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜி.வினாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன் சிறப்புரை யாற்றினார். சங்க நிர்வாகிகள் ஆர்.குகன், எம்.வேல்முருகன், எஸ்.கவுசிகன் ஆகியோர் பேசினர்.