tamilnadu

img

கடலில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதி கோரி வழக்கு

மதுரை:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடலோர விமான ஆம் புலன்ஸ் வசதியை ஏற்படுத்தக் கோரியவழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம்,  ஆர்.எஸ்.மங்களத்தை சேர்ந்த திருமுருகன்  என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மனுவில்,  தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது ஏற்படும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளமுடியாமல் பல மீன வர்கள் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு கடலோர பகுதி களில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு பல மீனவர்கள் உயிரிழந்தும், மேலும் பல மீனவர்களின் நிலை தற்போதுவரை என்னவென்று தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மீன வர்களை மீட்க கடலோர பாதுகாப்பு படையினரிடம் போதுமான மீட்பு படகுகள் இல்லை. மேலும் மீனவர்களை மீட்டு முதலுதவி செய்ய கடலோர அவசர உதவி கப்பல் இல்லை. எனவே கடலில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை, மீட்டு பாதுகாக்க கடலோர மாவட்டங்களில் கடலோர அவரச விமான ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று  நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுமுன்பு நடைபெற்றது.அப்போது,  இது குறித்து மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். வழக்கின் விசாரணை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.