court

img

உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்....

சென்னை:
கொல்கத்தா உயர்நீதிமன்ற  மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பானர்ஜியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் உத்தரவு பிறப்பித் துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். இவர் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி பதவிக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்து பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை ஏற்றுக் கொண்டு, குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து  உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, சென்னை உயர்நீதிமன்ற  50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி விரைவில் பதவி ஏற்க உள்ளார். 1961-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி பிறந்த சஞ்சீவ் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1990-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். கொல்கத்தா, தில்லி, அலகாபாத் என்று பல மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக  பணியாற்றியுள்ளார். சிவில், கம்பெனி சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் நிபுணத்துவம் பெற்றவர்.இதேபோல் பஞ்சாப், அரியானா மாநில உயர்நீதிமன்ற  நீதிபதியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த எஸ்.முரளிதர் ஒடிசா மாநில உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.