tamilnadu

img

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் முன்ஜாமீன்... உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக!

புதுதில்லி:
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நவம்பர் 26 அன்று முன்ஜாமீன் அளித்துள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்திட வேண்டும் என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு வழக்கில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்மணி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயத்தில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடுத்திருக்கிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் கோர முடியாது என்பதும், அத்தகைய மனுக்களை உயர்நீதிமன்றங்கள் எண்களிட்டு, அனுமதிப்பதற்காக எடுத்துக்கொள்வது கிடையாது என்பதும்  நிறுவப்பட்டுள்ள சட்ட ரீதியான நிலைப்பாடாகும்.

மேலே கூறிய வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமினாதன் கேட்டிருக்கிறார். வழக்கை அஜ்மல் கான் என்னும் வழக்கறிஞர் நடத்தியிருக்கிறார். இதன்மீது நவம்பர் 26 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பின்படி, குற்றம்சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தின் முன்பாக நிலுவையில் உள்ள வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கின் கீழ் முன்ஜாமீன் கோரி மனுச் செய்திட முடியும்.இந்தத் தீர்ப்பானது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18ஆவது பிரிவின் ஷரத்துக்களுக்கு எதிரானதாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438ஆவது பிரிவின்கீழ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்கு முன்ஜாமீன் கோர முடியாது.வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் புதுப்பித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கறாராக அமல்படுத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.நாட்டில் 25 கோடிக்கும் மேற்பட்ட தலித்/பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். அரசின் புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் தலித்/ பழங்குடியினருக்கு எதிராக ஒரு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆறு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 2007க்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையே தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 66 சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது கடந்த பத்தாண்டுகளில் இருமடங்காகி உள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் அனைத்தும் நாட்டில் தலித்துகளின் நிலைமைகள் எவ்வளவு பரிதாபகரமான முறையில் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. 

இந்தப் புள்ளி விவரங்கள்கூட நடக்கின்ற அட்டூழியங்களில் ஒரு சிறு அளவுதான். ஏனெனில் தலித்துகள், தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முறையீடுகள் தாக்கல் செய்வதில்லை.இந்தப் பின்னணியில், இப்போது மதுரை அமர்வாயம் அளித்திருக்கின்ற தீர்ப்பு, நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் நடைபெற்று வரும் அட்டூழியங்களையோ, தீண்டாமை நடைமுறைகளையோ கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட சமயத்தில், தலித்துகள் தங்கள் குடிமை உரிமைகளை நிறுவ முயலும்போது அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று  நாடாளுமன்றம் மிகவும் தெளிவாகவே கூறியது. சமூகத்தின் நிலைமைகளில் தலித்துகளுக்கு எதிராகவுள்ள இத்தகைய மோசமான நிலைமைகளைக் கணக்கில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438ஆவது பிரிவின்கீழ் முன்ஜாமீன் விதிவிலக்காக அளிக்கப்பட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்களை மேம்போக்காகப் படிக்கும் போதே, இத்தகைய விதிவிலக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கர்த்தார் சிங் வழக்கில் இத்தகைய விதிவிலக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் உயர்த்திப்பிடித்திருக்கிறது.எனவே, தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று கோருகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந.நி.)