ஒடுகத்தூர் அருகே ஆம்புலன்சிலேயே பிறந்த குழந்தை
ஒடுகத்தூர், அக்.10 ஒடுகத்தூர் அருகே குடிகம் மலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரேம்குமாரின் (34) மனைவி ரோஜாவுக்கு (30) புதனன்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ரோஜாவை ஏற்றிக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிப்பட்டு கிராமம் வழியாக சென்றது. ஆனால் சிறிது தூரம் சென்றதும் சேறும் சகதியுமான மண்சாலையில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. ஊர் மக்கள் உதவியுடன் டிராக்டர் மூலம் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸை மீட்டனர். மேலும் செல்ல முடியாத நிலையில், 70 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஜமுனாமரத்தூர், போளூர் வழியாக அழைத்துச் சென்றனர். வழியில் பிரசவ வலி அதிகரித்து ஆம்புலன்ஸிலேயே ரோஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய்க்கும் சேய்க்கும் சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விரைவாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒடுகத்தூர் அருகே குடிகம் கிராமத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளுக்குக் கூட கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், மலைவாழ் மக்களின் நலன் கருதி சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
யூத் லீக் கால்பந்து போட்டி சிறுகளத்தூர் அணி வெற்றி
குன்றத்தூர், அக்.10- அகில இந்திய கால்பந்து பெடரேஷன் சார்பில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான யூத் லீக் கால்பந்து போட்டி வியாழனன்று குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அம்பேத்கர் திடல் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில், சிறுகளத்தூர் கலெட்டிப்பேட்டை கால்பந்தாட்ட கிளப் அணி மற்றும் கால்பந்து பிளஸ் கிளப் அணியுடன் தகுதி சுற்று போட்டியில் மோதியது. இந்தப் போட்டியின் இறுதியில், சிறுகளத்தூர் கலெட்டிப்பேட்டை கால்பந்தாட்ட அணி, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு போட்டிக்கு முன்னேறியது. இதில், சிறுகளத்தூர் கலெட்டிப்பேட்டை கால்பந்தாட்ட அணி வீரர் தரணி வேந்தன் 5 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதேபோல், இந்த கால்பந்தாட்ட மைதானத்தில், 13 மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட தகுதிச் சுற்று போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது.
ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான சென்னை ஒன் ஐ.டி. வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், எங்கும் தடயம் கிடைக்கவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஐ.டி. நிறுவனங்களுக்கு பணிக்கு வந்த ஊழியர்களை வீட்டிற்குச் திரும்பி செல்ல நிறுவனங்கள் அறிவுறுத்தினர்.
உரம் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம்
திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலை மாவட்டம் நிலவி வரும் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.பெருமாள் வலி யுறுத்தியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்டக் குழு கூட்டம் வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் எ.லட்சுமணன், நிர்வாகிகள் ரஜினி ஏழுமலை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாநிலச் செயலாளர் பி.பெருமாள் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த பெருமாள் திருவண்ணாமலை மாவட்டம் நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் சாகுபடிக்கு தேவை யான யூரியா, உரம் கடும் தட்டுப்பாடாக உள்ளது. உரம் யூரியா வாங்க கடைக்குச் செல்லும்போது தரமற்ற இணை இடுபொருட்களை வாங்க நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரம், யூரியா தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 80 மையங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 42 நெல் நிலையங்கள் தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இதே போல உரிமத்தை தமிழக அரசு வழங்கியது. என்சிசிஎப் பெயரில் தனி யார் நெல் கொள்முதல் செய்தனர். பல மாதங்களாக பணம் தராமல் இழுத்தடித்த னர். எனவே என்சிசிஎப்க்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வசம் ஒப்படைக்க வேண்டும்”என்றார்.