போதையற்ற தமிழகம் உருவாக்க போர் பறை கொட்டும் வாலிபர் சங்கம்
விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தூக்குமேடையில் உயிர்நீத்த மாவீரன் பகத்சிங் பிறந்த பஞ்சாப் மண்ணில், லூதியானாவில் 1980 நவம்பர் 1-3 தேதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் தேசத்தின் விடுதலைக்காக தம் ரத்தத்தைச் சிந்தினர். வெள்ளை நிறக் கொடியில் அந்த ரத்தத்தால் டிஓய்எப்ஐ எனும் எழுத்துகளும், ஐந்து முனைகள் கொண்ட நட்சத்திரமும் பொறிக்கப்பட்ட கொடி உருவாக்கப்பட்டது. அந்தக் கொடியை நவம்பர் 3ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரரும், பகத்சிங்கின் நண்பரும், இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படையின் தலைவருமான கிஷோரிலால் ஏற்றினார். கள்ளக்குறிச்சி மாநாட்டின் வரலாற்று சிறப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது மாநில மாநாடு 2022 செப்டம்பர் 11-13 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சியில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளான செப்.11 அன்று மாலை, தமிழகம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெண்கொடியுடன் கள்ளக்குறிச்சி நகரில் குவிந்தனர். இதுவரை கண்டிராத இளைஞர் கூட்டத்தைப் பார்த்து பகுதி மக்கள் வியப்படைந்தனர். கள்ளக்குறிச்சி நகர மக்கள் வாலிபர் சங்கத்தின் பேரணியைப் பார்த்து வியந்து நின்றனர். "ஐயா வாழ்க, அம்மா வாழ்க, தலைவர் வாழ்க" என்று கேட்டுப் பழக்கப்பட்ட மக்களிடையே "வேண்டாம் போதை, வேண்டும் கல்வி, வேலை, சுகாதாரம்" என்ற முழக்கம் ஒலித்தது. மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேரணியை வரவேற்றுப் பாராட்டினர். போதையற்ற தமிழகத்திற்கான போராட்டம் கள்ளக்குறிச்சி நகரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த னர். இப்படித் தமிழகத்தில் போதைப் பழக்கத்தால் பல உயிர்களை இழந்துள்ளோம். இளைஞர்கள், மாண வர்கள் மத்தியில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதி கரித்து வருகிறது. இதற்கு எதிராக "போதையற்ற தமிழகம்" என்ற கோரிக்கையை முன்வைத்து வாலிபர் சங்கம்தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகளைச் சேகரித்து, சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மனுவாக வழங்கியது. தமிழகத்தில் வேலை யின்மை வரலாறு காணாத அளவுக்கு அதி கரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகுவதும், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வேண்டும் என்று 2022 நவம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான குரல் மயிலாடுதுறை தாலுக்கா வாலிபர் சங்கத் தலைவர் வைரமுத்து சாதி மறுப்புக் காதலித்த காரணத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இப்படி கவின், வைரமுத்து என தமிழகத்தில் சாதிய ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராகத் தனிச் சிறப்புச் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. மதுரையில் வாலிபர் சங்கம் "காதலைப் போற்றுவோம்" என்ற மிகப் பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தி, சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்த வர்களைப் பாராட்டியது. அரசூர் சேட்டுவின் தியாகம் அரசூரில் திரபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் படையல் போட 15 பைசா செலுத்த வேண்டும் என்ற பாகுபாட்டுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியது. ஊர் பொது வரு வாயில் தலித் மக்களுக்கும் பங்கு வேண்டும், புளியமர ஏலத்திலும், ஏரிக் குத்தகையிலும் தலித்துகளுக்கு உரிமை வேண்டும் என்று வாலிபர் சங்கத் தலைவர்கள் போராடினர். இதை ஏற்க முடியாத ஆதிக்க சாதியினர் தலித் குடிசைகளுக்குத் தீ வைத்தனர். ஆதிக்க சாதியினரை நேருக்கு நேர் எதிர்த்து நின்ற வாலிபர் சங்கத் தலைவர் அரசூர் சேட்டுவை 20 கயவர்கள் வெட்டிக் கொலை செய்தனர். 18வது மாநாடு நோக்கிய கொடிப் பயணம் அரசூர் சேட்டுவின் நினைவாக, 17வது மாநாடு நடைபெற்ற கள்ளக்குறிச்சி யிலிருந்து மாநிலக் கொடிப்பயணம் வெள்ளியன்று (அக்.10) தொடங்கியது. அக்.12, 13, 14 ஆகிய தேதிகளில் 18வது மாநில மாநாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடை பெற உள்ளது. அக். 12ஆம் தேதி தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான இளைஞர்களின் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளன.