திருநெல்வேலி, ஜன.24 - தென்காசியில் ‘மின்வாரிய பிரிப்பு நடவடிக்கைகளும் தனியார் மய ஆபத்துகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) திட்ட தலைவர் பி.நாகையன் தலைமை வகித்தார். தென்காசி கோட்டத் தலைவர் பட்டமுத்து வரவேற்று பேசினார். மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.மகாலட்சுமி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் எஸ்.ராஜேந்திரன் பேசுகையில், “மின்வாரியங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தால்தான் கடைக்கோடி மக்களுக்கும், விவசாயி களுக்கும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியும். ஆனால், மாநில மின்வாரியங்களை தனித்தனித் துண்டுகளாக சிதைத்து தனியாரிடம் தாரைவார்க்கும் வேலையை ஒன்றிய- மாநில அரசுகள் செய்து கொண்டு வருகின்றன. மின்சார சட்டம் 2003ன்படி அன்றைய திமுக அரசு மின்வாரியத்தை மூன்று கம்பெனிகளாக பிரித்தது. அவற்றில் பணியாற்றும் பணியாளர்களின் நலன் பாதுகாக்க அரசாணை 100 என்று 19.10.2010-இல் ஒரு உத்தரவு போடப் பட்டு, தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த மின்வாரியம் முயற்சி செய்தது. அரசாணை 100-இல் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக சரத்துக்கள் இருந்ததால் ஒப்பந்தம் இறுதி செய்யாமல் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பினால் கிடப்பில் போடப்பட்டது. அவ்வாறு தொழிலாளி நலனுக்கு எதிராக போடப்பட்டுள்ள அரசாணை 100 ஒப்பந்தத்தை 14 ஆண்டுகளுக்குப் பின் 12.02.24 அன்று தற்போது அரசு அவசர கதியில் தொழிற்சங்கங்களை அழைத்து தொழிற்சங்கங்களின் கை யொப்பம் பெற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. எனினும் இதில், சிஐடியு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு பின் தமிழக அரசு 6 மற்றும் 7 என்ற அரசாணை மூலம் ஏற்கனவே மூன்றாக பிரிக்கப் பட்ட மின்வாரியத்தில் டான்ஜெட்கோ (TANGEDCO) நிறுவனத்தை உடைத்து மேலும் இரண்டு கம்பெனிகளாக மாற்றியமைத்துள்ளது. எனவே ஒருங்கிணைந்த மின்வாரி யத்தை ஐந்து கூறுகளாக பிரித்து மின்சாரத்தை சேவைத் துறை என்பதை மறந்து லாப நோக்கோடு இந்த துறையை தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்த்திட ஒன்றிய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவற்றைப்பற்றி தொழி லாளர்கள், நுகர்வோர்கள். விவசாயி கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) முடிவு எடுத்து உள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பு, சிறு, குறு தொழிலாளிகளுக்கு வழங்கும் மானிய விலை மின்சாரம் விவ சாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரம் ஆகியவற்றைப் பாது காத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவரித்தார். கருத்தரங்கில் சிஐடியு மின் ஊழி யர் மத்தியமைப்பு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பீர் முகமது ஷா, திட்ட செயலாளர் டி.கந்தசாமி, திட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், மாநிலச் செயலாளர் வண்ணமுத்து மாநிலத் துணைத் தலைவர் வி. சந்திரன், திட்ட துணைத் தலைவர் அயூப்கான், திட்ட துணை தலைவர்கள் பச்சையப்பன்,தளபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் தென்காசி கோட்ட செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.