சென்னை,ஜன.30- சென்னையில் காரில் பயணித்த இளம் பெண்களை துரத்திச் சென்று மிரட்டிய இளைஞர்களை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா,மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த இளைஞர் கள் நான்கு பேர் மற்றொரு காரில் பயணம் செய்த இளம் பெண்களை துரத்திச் சென்று மிரட்டிய வீடியோ காட்சி வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த இளம் பெண்கள் மிகுந்த அச்சத்துடனும் பதற்றம் அடைந்து பேசியதும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடர்ச்சியாக பெண்கள் மீதான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. காரில் வந்து மிரட்டிய இளைஞர் களின் அரசியல் பின்புலம் குறித்தும், வேறு ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பதையும் விசாரித்திட வேண்டும். சம்பவத்தில் உடனடியாக காவல்துறை நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போதிலும், இக்குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியில் வந்துள்ளன.
மற்ற மூவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும். பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக செயல்படுவதற்கும், தங்களுடைய தேவைகளுக்காக போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளும் போது பாதுகாப்போடு செல்லும் சூழலை உருவாக்கவும் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.