tamilnadu

தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் விமானப்படையில் சேர வேண்டும் ஏர் கமாண்டர் வேண்டுகோள்

தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில்  விமானப்படையில் சேர வேண்டும் ஏர் கமாண்டர் வேண்டுகோள்

தஞ்சாவூர், டிச.12-  தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் விமானப்படையில் சேர வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்து ஏர் கமாண்டர் எஸ்.கிரிஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விமானப்படையில் இளைஞர்கள் சேர, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகன துவக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் பிரச்சார வாகனத்தை விமானப்படையின் ஏர் கமாண்டர் எஸ்.கிரிஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது: “இந்திய விமானப்படையில் சேர இளைஞர்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூரில் இதற்கான பிரச்சார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நாள்தோறும் சுமார் 70 கி.மீட்டர் தூரம் பயணித்து, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.  தமிழகம் முழுவதும் இந்த பிரச்சார வாகனம் செல்ல உள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் விமானப்படையில் சேரவும், இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் மற்றும் பல்வேறு பயன்பாடுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. வேலை தேடும் இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற முன் வர இந்த பிரச்சார வாகனம் பயன்படும்’’ என்றார். தொடர்ந்து, இவ்விழிப்புணர்வு வாகனம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.