ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலவாரிய ஆணைய ஆய்வுக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதியரசர் முனைவர் ச.தமிழ்வாணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் துணைத்தலைவர் இமையம் (வெ.அண்ணாமலை), தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணைய உறுப்பினர்கள் முனைவர்.க.ஆனந்தராஜா, பொ. இளஞ்செழியன், மாவட்ட வருவாய் அலுவலர் நா. உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி முனைவர் ச.தமிழ்வாணன் தெரிவித்ததாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணைய கள ஆய்வுக் கூட்டம் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் பெறப்படும் புகார் மனுக்களின் பேரில் நடைபெறும் விசாரணை குறித்தும், பள்ளி, கல்லூரி மாணாக்கரிடமிருந்து சாதிக் கயிறுகள் இருப்பின் அதனை அகற்றுதல், சமத்துவ சமுதாயத்தை பின்பற்றுதல், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஊராட்சிமன்றத் தலைவராக இருக்கும் ஊராட்சிகளில் பாகுபாடுகள் இருப்பின் அதுகுறித்து விவாதித்தல், புகார் மனுக்கள் பெறப்படும்போது உரிய சட்ட விதிகளின்படி வழக்குப்பதிவு செய்து, தீருதவித் தொகை உரிய காலத்தில் பெற்று வழங்கல் குறித்தும், வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கு சம்பந்தப்பட்ட சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995 சம்பந்தமாக பிரிவுகளைக் கையாளுவது குறித்தும், விரைவாக சாதிச் சான்றுகள் வழங்குதல் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலம், வீட்டுமனை சம்பந்தமாக ஏற்படும் இடர்பாடுகள் குறித்து விவாதித்தல், ஆணையத்தில் இருந்து கோரப்படும் அறிக்கைகள், விசாரணை அறிக்கைகள், ஆவணங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அனுப்பி வைத்தல் தொடர்பாக விவாதித்தல், செய்தித்தாள்களில் வரும் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விவாதித்தல் போன்ற பல்வேறு பொருளடக்கங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்களின் நிலவரம் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் அனைத்தும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேனாள் நீதிபதி முனைவர்.ச.தமிழ்வாணன் தெரிவித்தார். நலத்திட்ட உதவி வழங்கல் அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26,760 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், தாட்கோ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் 19 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டையினையும், தாட்கோ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு விபத்துக்காப்பீடு தொகை ரூ.1 இலட்சம் மதிப்பிலும், தாட்கோ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு மானியத்துடன் கூடிய ரூ.1,14,100 மதிப்பிலான பயணியர் ஆட்டோ என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 40 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முனைவர்.ச.தமிழ்வாணன் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரா.கீதா, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் சீனிவாசன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாட்கோ மேலாளர் செல்வக்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.