tamilnadu

img

அடையாளம் தெரியாத விலங்கு தாக்கி 20 வெள்ளாடுகள் பலி

அடையாளம் தெரியாத விலங்கு தாக்கி 20 வெள்ளாடுகள் பலி

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அடையாளம் தெரியாத விலங்கு தாக்கி 20 வெள்ளாடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் ஒட்டர் பாளையம் ஊராட்சி செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். விவசாயத் தொழில் செய்து வரும் இவர், தனது தோட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்துள்ளார். சனியன்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு பின்னர் தோட்டத்தில் உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் ஞாயிறன்று காலை சென்று பார்த்த போது 20 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தன. ஆட்டின் அருகே சென்று பார்த்த போது கழுத்தில் விலங்கு கடித்து கொண்றுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஆட்டின் உடல் உறுப்புகளை அந்த விலங்கு வேட்டைக்கு பின்னர் கடித்து தின்றுள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கும், அன்னூர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வெள்ளாடுகளை கடித்த அடையாளம் தெரியாத விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படும் நிலையில் ஒரே இரவில் அனைத்து ஆடுகளையும் அடையாளம் தெரியாத விலங்கு வேட்டையாடியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.