சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மனிதாபிமானமின்றியும், சட்டவிரோதமாகவும் புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்ததற்காக உத்தரப்பிரதேச அரசுக்கும், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியும், அரசியல்வாதியுமான அதிக் அகமதுவுக்கு சொந்தமான வீடு என்று தவறாக கருதி, கடந்த 2021-ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் வழக்கறிஞர் சுல்ஃபிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உட்பட 5 பேரின் வீடுகளை அலகாபாத் மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒகா மற்றும் உச்சல் புயான், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மனிதாபிமானமின்றியும், சட்டவிரோதமாகவும் புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்ததற்காக உத்தரப்பிரதேச அரசுக்கும், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.