articles

img

திருப்பு முனையில் இந்திய அரசியல் - சி.முருகேசன்

திருப்பு முனையில் இந்திய அரசியல் -   சி.முருகேசன்

இந்திய அரசியல் ஒரு திருப்பு முனையில் உள்ளது. தேசிய இயக்கத்தின் எதிர்பார்ப்புகளும் அரசமைப்பு சாசன மாண்புகளும் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளன.  மதச்சார்பின்மை நமது நாட்டுக்கே முக்கியமானதாகும்.  ஆனால், மதச்சார்புகொண்ட நாடாக மாற்றுவதற்கான நகர்வை சங் பரிவார் சக்திகளின் தலைமையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நாடு எதிர்கொள்ளும் இந்த ஆபத்தை முன்னதாகவே உணரவும் கொள்கை அளவிலும் தேர்தல்களிலும் சட்ட அரங்குகளிலும்  மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் சவால்களை தடுத்து நிறுத்துவதிலும் இடதுசாரிகள் எப்போதும் முன்னிலையில் உள்ளனர்.  தில்லியில் புல்டோசர்கள் உருண்டபோது அவற்றை தெருவில் எதிர்கொள்ள நாங்கள் நின்றோம். குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக்கும் நகர்வு ஏற்பட்டபோது ஒருங்கிணைந்து மாநிலத்திற்கு உள்ளிலும்  வெளியிலும் மக்கள் போராட்டங்களை நடத்தவும் அந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தவும் முன்னணியில் நின்றது இடதுசாரிகள்தான். ஒன்றிய அரசை அடிபணியச் செய்த விவசாயிகள் போராட்டத்திலும் இடதுசாரிகளின் நிறைந்து நின்றார்கள். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்த்தை மீட்டெடுப்பதற்கான சட்டப்போராட்டத்திலும் காத்திரமான தலைமை வகித்தது இடதுசாரிகளாகும். கார்ப்பரேட் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி அமலாக்கப்படும் பாஜகவுக்கு கருப்புப் பணம் நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமான சட்டப்போராட்டம் நடத்தியது இடதுசாரிகள்தான். 

பாஜகவை பலவீனப்படுத்திய விவசாயிகளின் எழுச்சி

கொள்கைகளை அம்பலப்படுத்துவதில், மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி அவற்றை முறியடிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது இடதுசாரிகள்தான். இந்த எதிர்ப்புதான் ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் சிந்திப்பதற்கு வழிவகுத்தது. உண்மை இவ்வாறிருக்க சங்கபரிவாரை  எதிர்கொள்ள தங்களுக்கு மட்டுமே திறன் உள்ளது என காங்கிரஸ் கட்சி கூறிக்கொள்கிறது. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக எழுந்த விவசாயிகளின் எழுச்சி கடந்த மக்களவைத் தேர்தலிலும் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் குறைத்து மதிப்பிட முடியாத அளவில் பாஜகவுக்கு எதிராக பிரதிபலித்தது. ஆனாலும் அங்கெல்லாம் பாஜகவை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது காங்கிரசின் கொள்கைகள் தான். இல்லாத வலு இருப்பதாக காட்டிக்கொண்டு மதச்சார்பற்ற வாக்குகள் ஒன்றிணைவதை காங்கிரஸ் தடுத்தது. அதன்படி பாஜகவை தோற்கடிக்கும் மக்களின் எதிர்பார்ப்பை தகர்க்கும் பாத்திரத்தை காங்கிரஸ் வகித்தது. பாஜகவுக்கு வெற்றியை ஈட்டித்தர முக்கிய பங்கு வகித்தது  மதச்சார்பற்ற வாக்குகளை பிளவுபடுத்திய காங்கிரசின் சீரழிவு அணுகுமுறையாகும். பாஜகவை எதிர்க்கும் இதர எதிர்க்கட்சிகளோடு காங்கிரஸ் காட்டுவது இணக்கமற்ற போக்காகும். அதன் சமீபத்திய உதாரணத்தை 2025 பிப்ரவரியில் நடந்த தில்லி சட்டமன்ற தேர்தலில் நாம் பார்த்தோம். 2015லும் 2020லும் காங்கிரஸ் கட்சி தில்லி சட்டமன்றத்தில் ஒரு இடத்தைக்கூட பெற்றிருக்கவில்லை. ஆனாலும் பாஜகவுக்கு எதிராக நின்ற தில்லியின் முக்கிய சக்தியான ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்துவதை லட்சியமாக கொண்டிருந்தது காங்கிரஸ். தில்லியில் ஆம்ஆத்மி கட்சியை வெற்றிபெறச்செய்வது தங்களது பணி அல்ல என்றே காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். தில்லியில் பாஜகவை வெற்றி பெறச் செய்வதே காங்கிரஸின் பணி என்பதல்லவா அவர்கள் கூறியதன் மறைபொருள்?.

பாஜக வெற்றிக்கு  உதவிய காங்கிரஸ்

தில்லியில் பாஜக வுக்கு 48 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 22 இடங்களும் கிடைத்தன. தேர்தல் ஆணையத்தின் சில புள்ளி விவரங்களை ஆய்வு செய்தால் தில்லி தேர்தலில் காங்கிரஸின் நிலைபாட்டால் மட்டுமே  14 இடங்களை பாஜக பெற்றுள்ளதைக் காணலாம். திமார்பூரில் பாஜக வேட்பாளருக்கு 1,168 வாக்குகள் மட்டுமே கூடுதலாக கிடைத்தது. இங்கு மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் 8,361 வாக்குகள் பெற்றது.  கிரேட்டர் கைலாசில் 3,188 வாக்குகளில் பாஜக வென்றது. மூன்றாவது இடம்பிடித்த காங்கிரஸ்  பெற்ற வாக்குகள் 6,711. மெஹ்ரோலியில் பாஜக வேட்பாளர்  வென்றது 1,782 வாக்குகளில். இங்கு மூன்றாவதாக வந்த காங்கிரஸ் 9,731 வாக்குகள் பெற்றது. இதுபோல் 11 இடங்களில் மூன்றாவது இடம்பிடித்த காங்கிரஸே பாஜகவின் வெற்றிக்கு காரணமாகும். பாஜகவே மிகப்பெரிய சவால் என்கிற அரசியல் உணர்வோடு தங்களது எல்லையை புரிந்துகொண்டு மதச்சார்பற்ற ஒற்றுமைக்கு உகந்த நிலைபாட்டை காங்கிரஸ் மேற்கொண்டிருந்தால் காட்சிகள் வேறு விதமாக மாறியிருக்கும் அல்லவா?  நாட்டின் தலைநகரில் அதிகாரத்தை உறுதிப்படுத்த பாஜகவுக்கு வாய்ப்பை உருவாக்கித் தந்தது காங்கிரஸ் என்பது தெளிவு. நமது மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புகள் இந்த அளவுக்கு சவால்களை எதிர்கொள்ளும்போது மிகப்பெரிய தவறை காங்கிரஸ் செய்கிறது. ஆம்ஆத்மி கட்சியுடன் என்ன கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை கையாளவும் ஒன்றுபட்டு பாஜகவின் தோல்வியை காங்கிரஸ் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். காங்கிரஸின் தவறான அணுகுமுறைக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.  

சொல் ஒன்று,  செயல் மற்றொன்று கடந்த சில மாதங்களுக்கு

முன்பு, அரியானாவிலும் மாநில கட்சிகளுடன் இதே அணுகுமுறையை காங்கிரஸ் மேற்கொண்டது. அப்படியென்றால், பாஜகவை தோல்வியுறச் செய்வதல்ல, மாறாக அவர்களது வெற்றியை உறுதிப்படுத்துவதே தங்கள் பணி என காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது. சொல் ஒன்றும் செயல் மற்றொன்றுமாக உள்ளது. உண்மையான மதச்சார்பற்ற கட்சிகளால் இப்படிப்பட்ட காங்கிரசை நம்பமுடியுமா?  முஸ்லீம்லீக் போன்ற கட்சிகளும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்.  பாஜகவை தோற்கடிக்க அதிக தகுதி படைத்தவர்கள் தாங்கள்தான் என காங்கிரஸ் கருதினால் இத்தகைய அணுகுமுறையைத்தான் சட்டமன்ற தேர்தல்களில் கையாள்வதா? தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மை வகுப்புவாதத்தை முன்வைக்கும் பாஜக கூடுதல் சட்டமன்றங்களை கைப்பற்றினால் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவலைப்படாத கட்சியாக மாறியிருக்கிறது காங்கிரஸ். மாநிலங்களவையில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும் தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அரசமைப்பு சாசனத்தையே மாற்றுவதற்கான பாஜகவின் நோக்கங்களுக்கு துணை நிற்கும் செயலையல்லவா காங்கிரஸ் செய்கிறது?.

பாபர் மசூதி இடிப்பு தேர்தல்

அரசியலில் மட்டுமல்ல, கொள்கைகளில்கூட சமரசம் செய்துகொண்டு வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்க்கிறது காங்கிரஸ். பெரும்பான்மை வகுப்புவாதத்துக்கு எதிரான நிலையை பலவீனப்படுத்துவதாக காங்கிரசின்  கொள்கை உள்ளது. பாபர் மசூதிக்குள் சிலைவைக்க அனுமதித்ததும் , அயோத்தியா பிரச்சனையில் வலுவான நிலைப்பாடு மேற்கொண்ட வி.பி.சிங் அரசை பாஜகவுடன் கூட்டாக 1991 இல் கவிழ்த்ததும் 1992இல் சங்பரிவார் சக்திகள் பாபர் மசூதியை தகர்த்தபோது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும் அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் தேசிய அளவில் பெரும்பான்மை வகுப்புவாதத்துக்கு வழிவகுக்கும் காங்கிரஸ் கொள்கையின் மோசமான விளைவாகும். இத்தகைய பின்னணி கொண்டவர்கள் தங்களுக்குத்தான் பாஜகவை தோற்கடிக்கும் திறமை உள்ளதாக இதன் பிறகாவது கூறாமல் இருக்க வேண்டும்.  வடஇந்தியாவில் வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக வுக்கு எதிராக வலுவான ஒற்றுமை அணிவகுப்பை உருவாக்க அங்குள்ள பெரிய மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி,  ஆர்.ஜே.டி கட்சிகளால்தான் முடியும்.  இன்றைய தேசிய அரசியல் சூழ்நிலையில் பாஜகவை தோற்கடிக்க அவர்களுடன் காங்கிரஸ் சேர்ந்து செயல்பட வேண்டும். மாறாக பாஜகவை தங்களால் தனியாகவே  தடுக்க முடியும் என கூறியிருப்பது யாருக்கு உதவும் என்பதை காங்கிரஸ் கட்சியே சிந்திக்கட்டும். இன்றைய தேசிய அரசியல் சூழ்நிலையில் இதர கட்சிகளையும் உட்படுத்தும் அணுகுமுறைக்கு காங்கிரஸ் தயாராகாவிட்டால் தில்லியில் ஏற்பட்ட அனுபவம் மேலும் பல இடங்களில் ஏற்படுவது கண்டு காங்கிரஸ் உருக்குலைந்து போகும் நிலை ஏற்படும். மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சி தத்துவங்களை பாதுகாக்க கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இயன்றவரை ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் விரும்புகின்றன. 

கேரள அரசியல் நிலை

மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் மதச்சார்பற்ற மாண்புகளை பாதுகாப்பதிலும் புகழ்பெற்ற மாநிலம் கேரளம். இங்கு கால்பதிக்க நீண்ட நாட்களாக சங்பரிவார் சக்திகள் நடத்தும் முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருப்பது இடதுசாரி அமைப்புகளாகும். இது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும் என்பதால்தான் அவர்களிடமிருந்து மிக அதிக அளவிலான தாக்குதல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். இடதுசாரிகளில் மூத்த தலைவர்களை தோற்கடிக்க சங் பரிவாரும் காங்கிரஸும் இணைந்து செயல்படுகின்றன. 1960இல் பட்டாம்பி தொகுதியில் இஎம்எஸ்ஸை  தோற்கடிக்கவும் 1971 இல் பாலக்காடு மக்களவை தொகுதியில் ஏ.கே.ஜியை தோற்கடிக்கவும் சங்கபரிவார் சக்திகளும் காங்கிரஸும் உடன்பாடு கண்டிருந்தன என்பது ஏற்கனவே அம்பலமாகி உள்ளது. அதன்பிறகு 1991 இல் கோ-லீ-பி (காங்கிரஸ், முஸ்லீம்லீகு, பாஜக) கூட்டு உண்மையென்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  தேசிய அளவில் வலுவை நிரூபித்துள்ள சங்பரிவார் சக்திகள் கேரளத்தில் தங்கள் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த தொடர்ச்சியாக முயன்ற வருகின்றன. இதில் காங்கிரஸ் இப்போது புதியதாக ஒரு உதவியை செய்துகொண்டிருக்கிறது. இடதுசாரிகள் மேற்கொள்ளும் உறுதியான நிலைப்பாடு, சங்பரிவார் சக்திகளின் வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக  மாண்புகளை உயர்த்திப்படிப்போரின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் சங்பரிவார் மேற்கொள்ளும் அதே வகுப்புவாதத்தின் மற்றொரு வடிவமான எஸ்டிபிஐ, ஜமாத்தே இஸ்லாமி போன்றவற்றுடன் கூட்டணி அமைப்பதே இப்போது காங்கிரஸ் மற்றும் யூடிஎப் கொள்கையாக உள்ளது. இது பாஜகவுடன் மறைமுக உறவு வைத்துக்கொண்டு செய்யப்படுகிறது என்பதுான் விசித்திரம்.   தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை சிறுமைப்படுத்த பாஜகவின்  கையில்  காங்கிரஸ் அளிக்கும் மிகவும் வலுவான ஆயுதமே இந்த வகுப்புவாத கூட்டணி. தற்காலிக லாபத்துக்காக சங்பரிவாரத்துக்கு இவ்வாறு உதவுகிறது காங்கிரஸ். இது மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிக்கும் கேரள சமூகத்தில் மத அடிப்படையிலான பிளவை உருவாக்குவதும் வகுப்புவாத சக்திகளுக்கு வலுசேர்ப்பதுமாகும். இதனை இடதுசாரிகள் கடுமையாக  எதிர்ப்பது அதனால்தான்.  லட்சியங்களும்  சாதனைகளும்  கேரளத்தை அறிவார்ந்த நவீன சமுதாயமாக மாற்றி, அதன்மூலம் ஒரு புதிய கேரளம் படைப்பதே இடது ஜனநாயக முன்னணி அரசின் லட்சியம். அந்த லட்சியத்தை அடைய 2016இல் அதிகாரத்துக்கு வந்த எல்டிஎப் அரசு இதுவரை மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் ஆண்டுதோறும் மக்களிடம் அறிவிக்கும் வகையில், முன்னேற்ற அறிக்கை வெளியிடுவதுண்டு. ஒரு ஜனநாயக சமூகத்தில் மக்களின் பங்கேற்புடன் ஆட்சியை முன்னோக்கி செலுத்துவதன் உதாரணமாகும் இது.  2016க்கு பிறகு கேரள சமூகத்தின் மனநிலையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வளர்ச்சித்திட்டமும் இங்கு நடக்காது என்கிற எண்ணம் மாறியதுடன் யூடிஎப் காலத்தில் கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டம் உட்பட சாத்தியமாகும் காட்சியை இன்று நாம் பார்க்கிறோம். கெயில் எரிவாயு குழாய், பவர்  ஹவே உட்பட 2016க்கு  பிறகு பல்வேறு சாதனைகளைப் படைக்க முடிந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுக முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. 2045 என்கிற கால வரையறைக்கு முன்பு 2028 ஆம் ஆண்டே திட்டம் நிறைவேறி முழுமையாக செயல்படும். இது கேரள வளர்ச்சியின் ஒரு  மைல் கல்லாகும்.

பிஎஸ்ஸி மூலம்  2,73,949 வேலைகள்

எளிய முறையில் பணியாளர் தேர்வு வாரியம், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. 2016 முதல் 2021 வரை பி.எஸ்.ஸி மூலம் 1,77,674 நியமனங்கள் நடத்தப்பட்டன. 2022 முதல் 2025 கால அளவில் இதுவரை 96,275 நியமனங்கள் நடத்தப்பட்டுள்ளது. அரசு சேவைகள் எளிய முறையில் மக்களுக்கு சென்றடைய சட்டங்களை பின்பற்றி ஆன்லைன் சேவைகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேவைகள் மக்களது உரிமை என்பதும், அது யாருடைய கருணையாலும் கிடைப்பதல்ல என்கிற உறுதியான நிலைபாடு அரசுக்கு உள்ளது.

ரூ.1,52, 905 கோடி  முதலீடு வருகை

தொழில்கள் வராத மாநிலம் என கேரளத்தைக் குறித்தான தவறான பிரச்சாரத்தை இன்று யாராலும் எளிதாக நடத்த முடியாது. தொழில் நட்பு சூழலை உருவாக்குவதில்  கேரளம் மிகவும் முன்னேறி உள்ளது. ‘ஈஸி ஆப் டூயிங் பிசினஸ்’ என்பதில் நாம் முதலிடத்தைப் பிடித்தது பகல் வெளிச்சம் போல் தெளிவாகி உள்ளபோதும் அதை அங்கீகரிக்க இங்குள்ள சில எதிர்க்கட்சியினரால் முடியவில்லை. கொச்சியில் நடந்த முதலீட்டு சங்கமத்தில் கேரளத்தில் முதலீடு செய்ய பிரபலமான முதலீட்டாளர்கள்  ஆர்வம் காட்டினார்கள் என்பதை நாம் பார்த்தோம். அந்த முதலீட்டாளர்களால்  ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 905 கோடி ரூபாய் முதலீடுக்காக 370க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றை சாத்தியமாக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  2016இல் எல்டிஎப் அரசு அதிகாரத்துக்கு வந்தபோது மாநிலத்தில் 3 ஐடி பூங்காக்களான டெக்னோ பார்க், இன்போ பார்க், சைபர் பார்க் ஆகியவற்றில் 673 நிறுவனங்களும் 84,720 ஊழியர்களும் இருந்தனர். 2023-24இல் 3 ஐடி பார்க்குகளிலுமாக 1,153 நிறுவனங்களும் 1,47,200 ஊழியர்களும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 477 நிறுவனங்களும் 62,480 ஊழியர்களும் கூடுதலாக வந்துள்ளதை இதில் காணலாம். 

தமிழில் : சி.முருகேசன்