tamilnadu

img

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை  மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு ஒன்றிய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில், தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிப் பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் என சுமார் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதுகுறித்து, தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் கூறியது:  கடந்த 2022 ஆம் ஆண்டு ஜன.13 ஆம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெறற்றிலைக்கும்,  தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம், தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலசங்கம் சார்பில், தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு, நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டு, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில், புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.  தமிழகத்தில் இதுவரை 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது”  இவ்வாறு அவர் கூறினார்.