tamilnadu

img

மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இடதுசாரிகள் மேலும் நெருக்கமாக பணியாற்றுவோம்!

மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இடதுசாரிகள் மேலும் நெருக்கமாக பணியாற்றுவோம்!

சீத்தாராம் யெச்சூரி நகர், (மதுரை) ஏப். 3- “இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இடதுசாரிக் கட்சிகள் முன்னெப்போதையும் விட, மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம்” என்று சிபிஐ(எம்எல்) கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் கூறினார். மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் மாநாட்டை வாழ்த்தி அவர்  ஆற்றிய உரை வருமாறு: தோழர்

சீத்தாராம் யெச்சூரியை  இழந்து நிற்கிறோம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும் இந்த தருணத்தில், தோழர் சீத்தாராம் யெச்சூரியை நாம் அனைவரும் மிகவும் இழந்துள்ளோம். பல ஆண்டுகளாக சிபிஎம்-ஐ வழி நடத்தியவர். 1980-களின் பிற்பகுதியிலிருந்து, குறிப்பாக 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை சங்பரிவார கும்பல் இடித்து தள்ளியது முதல் அவர்க ளின் பாசிச சதித் திட்டத்தை அம்பலப்படுத்துவதில் தோழர் சீத்தாராம் முக்கிய பங்கு வகித்தார். மோடி - அமித்ஷா - யோகி மோசமான சகாப்தம் தொடங்கியவுடன், நாடாளுமன்ற உறுப்பினராக, பேச்சராளராக, கட்டுரையாளராக பலவிதங்களில் அவர் செயல்பட்டு, அதிகரித்து வரும் பாசிச தாக்கு தல்கள் குறித்து நாட்டை எச்சரிக்கவும், பாசிசத்திற்கு எதிராக விரிவான சாத்தியமான ஒற்றுமையின் அவ சியத்தையும் எடுத்துரைத்தார்.

பாஜக-வைத் தோற்கடித்த  தமிழக மக்களுக்கு பாராட்டு

ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அரசியலமைப்புச் சட்டம், மற்றும் அரசியல் சாசனத்தால் உருவாக்கப் பட்ட பல்வேறு அமைப்புகள் சீர்குலைக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையிலும் 2024 மக்களவைத் தேர்தலில் நாட்டுமக்கள் பாஜகவுக்கு பலத்த அடி கொடுத்தனர். பாஜகவை மீண்டும் ஒருமுறை உறுதி யாக நிராகரித்தனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் தடுத்த தற்காக தமிழக மக்களை பாராட்டுகிறேன். ஆனால் மோடி அரசாங்கம் தப்பிப்பிழைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஜனநாயகத்தை நசுக்கி, நமது குடியரசின் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் ஒவ்வொரு அங்கத்தையும்  அழிக்கும் நடவடிக்கை யில் இறங்கியுள்ளது.

உரிமைப் பறிப்புக்கு எதிராக தீர்மானகரமாக செயலாற்றுவோம்

அரசியலமைப்பு சட்டம்  ஏற்றுக்கொள்ளப்பட்டு நாட்டில்  குடியரசு நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ள நிலையில், இந்திய மக்களாகிய நாம் இன்னும் நெருக்கமாக ஒன்றிணைந்து, மேலும் துணிச்சலுடனும், வலிமை மற்றும் மன உறுதியுடன் பாசிச தாக்குதலை எதிர்க்கத் தீர்மானிக்க வேண்டும். இடதுசாரி முகாமில் உள்ள நாம் அனைவரும், தனியார் மயம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டடத் தொகுப்புகள், வேளாண் துறையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை பறித்தல் போன்ற ஒன்றிய அரசின் மோசமான நட வடிக்கைகளுக்கு எதிராகவும் கல்வி வளாகங்கள் மற்றும் பாடத்திட்டங்களைக் காவிமயமாக்க முயலும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்திலும் நிச்சயமாக ஒன்றுபட்டுள்ளோம். ஆனால் நாம் அவசர மாக கவனம் செலுத்த வேண்டிய வேறு சில பிரச்ச னைகளும் உள்ளன.

சத்தீஸ்கர் பழங்குடிகள் மீது மிருகத்தனமான போர்

இந்தியாவை ‘நக்சல் இல்லாத’ நாடாக மாற்ற அமித் ஷா ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் நிர்ணயிக்கப் பட்ட இந்த இலக்கை அடைய சத்தீஸ்கர் பாஜக அர சாங்கம் ‘ஆபரேஷன் காகர்’ அல்லது ‘இறுதி கட்டப் போர்’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளது. 2023 ஆண்டு  டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பஸ்தார் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் ஆதிவாசிகள் மீது ஒரு மிருகத்தனமான போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏற்கெனவே பல நூறு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நீதிக்குப் புறம்பான வன்முறை மற்றும் சித்தாந்த வேட்டையின் ஆட்சி, சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற இடங்களிலும் பிரதிபலிக்கும். சந்தே கத்திற்கு இடமின்றி மாநிலத்தை சட்டமற்றதாக்கும், இந்த அரச பயங்கரவாதம் - கண்காணிப்புக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். உடனடியாக இத்தகைய நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரவும், எந்தவொரு நியாய மான விசாரணையும் இல்லாமல் காலவரையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்க ளை விடுவிக்கவும் நாம் போராட வேண்டும்.

தேர்தல் பலம் பின்னடைவால் போராட்டம் பின்தங்கி விடாது

கம்யூனிச சித்தாந்தம் ஆர்எஸ்எஸ்-ஸின் பாசிச வடிவமைப்பிற்கு எதிராக இடைவிடாமல் போராடி வருகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் பெரும்பாலான காலங்களில், ஆர்எஸ்எஸ் மிகவும் தனிமைப் படுத்தப்பட்டே இருந்தது, ஆனால், இன்று அது அரசு அதிகாரத்தின் மிருக பலத்தோடு செயல்படுவதால், மாநிலத்தின் ஒவ்வொரு களத்திலும் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் தன்னை உறுதியாக நிலை நிறுத்திக் கொள்ள முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கம்யூனிஸ்டு களின் தேர்தல் பலம் நிச்சயமாக பெரிய பின்ன டைவை சந்தித்துள்ளது, ஆனால் பாசிச அச்சுறுத்த லுக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை பலவீனப்படுத்த நாம் அதை அனுமதிக்கக்கூடாது. அனைத்து துறைகளிலும் நெருக்கமான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன், இந்தியாவின் வளமான கம்யூ னிச மரபின் வாரிசுகளின் இன்றைய தலைமுறை நிச்சயமாக பாசிச சக்திகளை முறியடிக்கும்.

சிபிஎம்-முடன் நெருக்கமாக  இணைந்து செயலாற்றுவோம்

வரலாற்று ரீதியான வேறுபாடுகள் அனைத்தையும் மீறி, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், இன்றைய சவால்களை எதிர்கொள்ளவும், சிபிஐ(எம்) மற்றும் இந்தியாவில் உள்ள கம்யூனிச இயக்கத்தின் பிற பிரிவுகளுடன் முன்னெப்போதையும் விட நெருக்கமாக இணைந்து பணியாற்ற  சிபிஐ(எம்.எல். லிபரேசன்) விரும்புகிறது. இந்திய முற்போக்கான ஜன நாயக இயக்கத்தின் இந்த முக்கியமான கட்டத்தில் சிபிஐ(எம்)-ன் 24வது மாநாடு வெற்றிபெற வாழ்த்து கிறோம். இன்குலாப் ஜிந்தாபாத். இவ்வாறு தீபங்கர் பட்டாச்சார்யா உரையாற்றினார்.