உலோகக் கலவைக்கு புதிய முறை
அலுமினிய உலோகக் கழிவிலிருந்து புதிய உலோகக் கலவையை உண்டாக்க இப்போதுள்ள முறையில், கழிவை உருக்கி, அச்சில் வார்த்து பின் வெட்டி எடுப்பதாகும். இதில் காலமும் செலவும் அதிகம். பசிஃபிக் நார்த்வெஸ்ட் நேஷனல் சோதனைச் சாலையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் திட நிலையில் அலுமினிய கழிவுடன் காப்பர், சிங்க், மெக்னீசியம் போன்ற உலோகங்களை கலந்து சில நிமிடங்களில் புதிய உலோகக் கலவை உண்டாக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேப் (Shear Assisted Processing and Extrusion) எனப்படும் இந்த முறையில் ஒரு அச்சு அதிக வேகத்தில் சுழல்கிறது. இதனால் வெப்பமும் உராய்வும் உண்டாகி கச்சாப் பொருட்களை பரவலாக்கி சீரான உலோகக் கலவையை உருவாக்குகிறது. இந்தக் கலவையானது புதிதாக உண்டாக்கப்படும் அலுமினியத்தின் குணாம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால் குறைந்த செலவில் கிடைக்கிறது. மேலும் இந்தக் கலவை, உயர் இழுவிசை வலிமை(tensile)யும் வழமையான முறையில் மறு சுழற்சி முறையில் கிடைக்கும் அலுமினியத்தை விட 200% வலிமையாகவும் உள்ளது. வாகனங்கள், கட்டடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றில் இது பயன்படும். இந்த ஆய்வின் முக்கியத்துவம் என்னவென்றால் அலுமினியம் மட்டுமல்ல. வேறு உலோகங்களுக்கும் இந்த முறையை பயன்படுத்தலாம். முழு தயாரிப்பும் திட நிலையிலேயே நடைபெறுவதால் இதுவரை உண்டாக்க முடியாத புதிய உலோகக் கலவைகளையும் சிந்திக்கலாம் என்கிறார் இந்த ஆய்வகத்தை சேர்ந்தவரும் ஆய்வின் முதல் ஆசிரியருமான சியோ லி.
மூளையின் வரைபடத்தில் சென்னை ஐஐடி புதிய சாதனை
கருவின் மூளையின் விரிவான முப்பரிமாண வரைபடத்தை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஆய்வுகளில் இது உலகின் முன்னோடியாக கருதப்படுகிறது. நரம்பியல் துறையை இது முன்னெடுத்து செல்லும் என்றும் மூளையை பாதிக்கக்கூடிய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வளர்த்தெடுப்பதில் உதவும் என்றும் கூறுகிறார்கள். ஐஐடியின் பல்துறை ஆய்வாளர்களும் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களும் சென்னையிலுள்ள மெடிஸ்கேன் மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கூட்டோடு இதை செய்துள்ளார்கள். இதன் முதன்மை ஆசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம் ஆவார். இந்த ஆய்வு இந்தியாவிற்கு முக்கியத்துவமானது. ஏனெனில் உலகில் பிறக்கும் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று (வருடத்திற்கு 25 மில்லியன்) இந்தியாவில் பிறக்கிறது. மேலும் கரு, குழந்தை, சிறார், இளம்பருவம் என மூளை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பதையும் கற்றல் குறைபாடு, ஆட்டிஸம் போன்றவற்றையும் புரிந்து கொள்ள உதவும். நுண்ணோக்கியில் செல்களையும் திசுக்களையும் ஆய்வு செய்யும் துறையில்(ஹிஸ்டாலஜி) உலகத் தரம் வாய்ந்த கருவிகளைக் கொண்டு மூளையின் மிக அதிக அளவிலான தெளிவு பிம்பங்களை கொடுக்கும் நுணுக்கத்தை ஐஐடியின் இந்த மய்யம் வளர்த்துள்ளது. பல தரப்பட்டதும்(பக்கவாதம், மறதி) பலவயதினரினதும்(கரு, பிறக்கும் நிலையுள்ள குழந்தை, இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள்) மூளைகளை பல்வேறு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெற்று ஆய்வு செய்து தரவுகளை சேமிக்கிறார்கள். இந்த முதல் தரமான தரவுகள் மனித மூளையின் மிகத் தெளிவான பார்வையைக் கொடுப்பதோடு மூளை முழுவதிலுமுள்ள செல் அளவிலான விவரங்களையும் காட்டுகிறது. இந்த மய்யம் மனித மூளை தரவுகளின் பெரும் களஞ்சியமாகவும் உலக ஒப்பீட்டு மய்யமாகவும் திகழலாம். இந்த ஆய்வு ‘ஒப்பீட்டு நரம்பியல்’ இதழ் (Journal of Comparative Neurology) எனும் நூற்றாண்டு பழமையான இதழில் வெளியிடப்பட உள்ளது.
குளிர் காலத்தில் சளி அதிகம் பிடிப்பது ஏன்?
சளி என்று பொதுவாக சொல்லப்படுவது ரைனோ வைரஸ், இன்ஃபுளயன்ஸா வைரஸ், கொரோனா வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாவது. இதில் கொரோனா வைரஸ் கோடை காலத்திலும் தாக்கலாம். குளிர் காலத்தில் இந்தக் கிருமிகளின் வெளிப்புற சவ்வு திடமாகவும் ராப்பர் போன்றும் மாறுகிறது. இதனால் எளிதாகப் பரவுகிறது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இன்னொன்று, நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் உள்ள நீர்த் துளிகள் வறண்ட காற்றினால் வேகமாக ஆவியாகிறது. ஆகவே நம் இருமும்போதும் தும்மும்போதும் வெளிவரும் கிருமிகள் சிறியதாகி அதிக நேரம் நிலைத்திருப்பதுடன் அதிக தூரம் பரவவும் முடிகிறது. நாம் உள்ளிழுக்கும் குளிர்ந்த காற்று நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதுவும் வைரஸ்கள் எளிதாக தொற்றுவதற்கு காரணமாகிறது. மூக்கு, வாய் ஆகியவற்றை ஒரு துணியால் மூடிக்கொள்வது நாம் உள்ளிழுக்கும் காற்றை சூடாக்கி இதை தடுக்கலாம். சூரிய ஒளி குறைவாக நம் மேல் படுவதால் வைட்டமின் டி உண்டாவதும் குறைகிறது. இதுவும் நம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அதிக நேரம் வீட்டினுள்ளே இருப்பதல் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கிறோம். இதுவும் நோய் பரவுவதற்கு காரணமாகிறது. குளிர்ந்த தட்ப வெப்பத்தினாலும் குறைவான ஈரப்பதத்தினாலும் நமது கண்கள், மூக்கு மற்றும் தொண்டையிலுள்ள பிசுபிசுப்பான சவ்வுகள் வறண்டு விடுகிறது. வைரஸ் கிருமிகள் இந்த பாதிக்கப்பட்ட வறண்ட பகுதிகளில் எளிதாகத் தொற்ற முடிகிறது. கைகளை அடிக்கடி கழுவுவதல், தண்ணீர் அதிகமாக குடிப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்தல், உடற்பயிற்சி செய்வது, செயலூக்கமாக இருப்பது, முகத்தை அடிக்கடி தொடாமல் இருப்பது போன்றவற்றால் சளி பிடிப்பதை ஓரளவிற்கு தடுக்கலாம்.