திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு புதன்கிழமை (ஜனவரி 29) அகர்தலாவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. கடைசி நேரத்தில் கிடைத்த அனுமதியையடுத்து ரவீந்திர பவன் அருகே உள்ள ஓரியண்ட் சவுமுகனி பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், கட்சியின் மாநில செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
வலுவாக எழுவோம்!
பிரகாஷ் காரத் தனது உரையில், “ஜனநாயகத்தை கொலை செய்வது பாஜகவின் டி.என்.ஏவில் உள்ளது. இடதுசாரி இயக்கத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் அழிக்க எவ்வளவு தடைகளையும் தாக்குதல்களையும் நடத்தினாலும், நாங்கள் மேலும் வலுவாக எழுவோம்” என்று எச்சரித்தார். “மோடி அரசின் 11 ஆண்டு ஆட்சியில் நாடாளுமன்ற நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடுவதும், சிறையில் அடைப்பதும் மோடி அரசின் வழக்கமான செயலாக மாறிவிட்டது” என்று அவர் குற்றம்சாட்டினார். “’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற மசோதா மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க பாஜக அரசு சதி செய்கிறது. நமது அரசியலமைப்பின்படி ஒரு சட்டசபையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் இந்த திருத்தத்தின் மூலம், ஒரு சட்டசபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகளா அல்லது 3 ஆண்டுகளா என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியும்” என்றும் விமர்சித்தார். வருமான ஏற்றத்தாழ்வு குறித்து பேசிய பிரகாஷ் காரத், “நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காகவும், பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்கான திட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுக்கும்” என்றார். “இடதுசாரி ஆட்சியின் போது மதக் கலவரங்கள் நடைபெறவில்லை. ஆனால் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதியால் பல்வேறு இடங்களில் மத கலவரங்கள் நடைபெறுகின்றன. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து, இந்துத்வா ராஜ்ஜியத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இது நமது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது” என்றும் அவர் எச்சரித்தார்.
மாணிக் சர்க்காரின் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், “2018ல் பிரதமர் நரேந்திர மோடி ‘சலோ பல்டாய்’ என்ற முழக்கத்துடன் விரைவான வளர்ச்சிக்கு உறுதியளித்தார். ஆனால் இன்று வேலையின்மை உச்சத்தில் உள்ளது, விலைவாசி உயர்ந்துள்ளது, மக்களின் வாங்கும் சக்தி சரிந்துள்ளது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இந்துக்களும் முஸ்லிம்களும் பல தலைமுறைகளாக அமைதியாக வாழ்ந்த பகுதிகளில் முறையாக மத வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன” என்று குற்றம்சாட்டினார்.
பாஜகவின் தடைகளும் தாக்குதல்களும்
முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு கட்சி ஆதரவாளர்களை ஏற்றி வந்த வாகனங்கள் சில இடங்களில் சேதப்படுத்தப்பட்டன. அகர்தலா ரயில் நிலையத்தில் பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான தோழர்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து கூட்டத்திற்கு வந்தனர். மேற்கு திரிபுராவின் குமுல்வுங் பகுதியில் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இத்தனை தடைகளையும் மீறி லட்சக்கணக்கானோர் பேரணியில் திரண்டனர். இதைச் சுட்டிக்காட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், இந்த பேரணியின் அளவே மக்கள் பாஜகவை அகற்ற விரும்புவதற்கான தெளிவான அறிகுறி என்றார். அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராடுவோம் என்று உறுதியளித்தார்.