tamilnadu

img

தமிழ்நாட்டில் 369 பறவை இனங்கள்

தமிழ்நாட்டில் 369 பறவை இனங்கள்

 ஜிபிபிசி கணக்கெடுப்பில் தகவல்

2025 பிப்ரவரி 1 முதல் தமிழ்நாடு முழு வதும் கிரேட் பேக்யார்ட்  பறவை எண்ணிக்கை (GBBC) என்ற பெயரில் பறவை இனங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை திங்கள்கிழமை அன்று வெளியானது. அதில் மாநிலம் முழுவதும் 369 பறவை இனங்கள் இருப்பதாகவும், அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 236 இனங்கள் இருப்ப தாக கூறப்பட்டுள்ளது.  அரிதான நிகழ்வாக மலபார் சாம்பல் இருவாய்ச்சி மற்றும் இந்திய சாம்பல் இருவாய்ச்சி ஆகியவை ஆனைகட்டியில் (கோயம்புத்தூர்) காணப்பட்டன. அதே போன்று  முதன்முறையாக ரஷ்யாவிலிருந்து இடம் பெயர்ந்து வரும் ஒரு பறவை இனமான செந்தொண்டை ஈப்பிடிப்பான் (பிசெடுலா அல்பிசில்லா) பறவை ஜோடியும்,  இமயமலை யில் காணப்படும் நீலத் தொண்டை ஈப்பிடிப் பானுடன் ஆனைகட்டியில் உள்ள நீலகிரி உயிர்க்கோள இயற்கை பூங்காவில் காணப் பட்டுள்ளது.

 மேலும் பள்ளி மாணவர்கள் தங்கள் பறவைப் பயணத்தின் போது கோலாரம்பதி ஏரி யில் முதன்முறையாக அரிய ரட்டி-ப்ரெஸ்டட் க்ரேக் (சிவந்த மார்பக காடை வகை) பறவை இனத்தையும் கண்டறிந்துள்ளனர். முந்தைய சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள கிருஷ்ணாம்பதி ஏரியில் (கோவை) இந்த பறவை காணப்பட்டது.  கோவை குற்றாலத்தில் பிளேம்பேக், மஞ்சள்-கிரீடம் கொண்ட மரங்கொத்தி மற்றும் துருப்பிடித்த வால் ஈப்பிடிப்பான் உள்ளிட்ட பறவைகளும் காணப்பட்டுள்ளன.  மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர் ஆர். நந்தகுமார் கூறுகையில்,”வெள்ளைத் தலை கொண்ட மரங்கொத்தி உட்பட 84 பறவை இனங்கள் கல்லூரி வளாகத்தில் 6 ஆண்டுகளில் முதல் முறையாகக் காணப்பட்டன. அதே போல இந்திய சாம்பல் நிற இருவாய்ச்சி, நீல முகம் கொண்ட மல்கோஹா மற்றும் பேன்டெயில் போன்ற புலம்பெயர்ந்த  பறவைகளை நாங்கள் கண்டறிந்து, விவரங்களை இபேர்ட் (eBird) போர்ட்டலில் பதிவேற்றினோம்” என அவர் கூறினார்.