tamilnadu

img

கூட்டுறவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கூட்டுறவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை திருவண்ணாமலை, பிப். 25- திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலர் கூட்டுறவு வங்கியில் போலி நகை வைத்து பணம் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும்,  அது குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வள்ளிவாகைப்பட்டி கோகுல், சிவக்குமார், அரடாப்பட்டு கிருஷ்ண மூர்த்தி, கருணாநிதி, வள்ளிவாகை புகழேந்தி, கருமாரப்பட்டி கோகிலன், தென்னரசம்பட்டு குணசேகரன் உள்ளிட்ட 17 பேர் மாவட்ட கூட்டுறவு வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது கூட்டுறவு வங்கிகளில் நாங்கள் நகை அடகு வைக்கவும் இல்லை, அதற்கான பணம் பெறவும் இல்லை என்றும்,  கூட்டுறவுத் துறையில் போலி நகைக்கடன் மோசடி நடைபெற்றுள்ளது என்றும் உரிய விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.