இருவழிச்சாலை மையத் தடுப்பை அகற்றிய ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி
காஞ்சிபுரம்,பிப்.25- உத்திரமேரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விளைவித்த தானிய பொருட்களை விவசாயிகள் எளிதில் கொண்டு செல்ல இருவழிச்சாலை மையத் தடுப்பை அகற்றி வழி ஏற்படுத்திக் கொடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட மேலப்பாளையம் அருகில் செங்கல்பட்டிலிருந்து வந்தவாசிக்கு செல்லும் இருவழி சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு எதிரே இருக்கும் இருவழிச்சாலை மைய தடுப்பு சுவர் இருப்பதால், எளிதில் தானியங்களை கொண்டுசெல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கேளம்பாக்கம், களியாம்பூண்டி, பெருநகர், ஐசூர், காட்டூர், அரசாணிமங்கலம், வெங்கசேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாட்டு வண்டி, டிராக்டர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றிவரும் நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் உத்தரமேரூர் வட்டார விவசாயிகள் சார்பில் வி.கே.பெருமாள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விற்பனை கூடத்திற்கு எதிரே உள்ள மையத் தடுப்பு சுவரை அகற்றி விவசாயிகள் எளிதில் செல்ல வழி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன் இருவழி சாலை மைய தடுப்பு சுவற்றை அகற்ற உத்தரவிட்டார். இது அப்பகுதி வட்டார விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியருக்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்
. காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும்: அறிவியல்இயக்கம் கோரிக்கை
திருவள்ளூர், பிப்.25- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட குழுவின் கூட்டம் ஞாயிறன்று (பிப் 23), செங்குன்றத்தில் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலதுணைத்தலைவர் மருத்துவர்.அனுரத்னா துவக்கவுரையாற்றினார். முன்னாள் மாநில நிர்வாகி தனஞ்செயன், மாவட்ட கவுரவ தலைவர் சாந்தகுமாரி, முனைவர்.சுருளிவேல்,மாநில பொதுக்குழு உறுப்பினர் தாளமுத்து நடராசன், ஆசிரியர் ஜெயராஜ், செந்தமிழ் செல்வன், எழுத்தாளர் விழியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் காந்தி லெனின் சிறப்புரையாற்றினார். செயலாளர் பி.ஜெயநாரயணன் அறிக்கையை சமர்பித்தார். பொறியியல் கல்லூரி பேராசிரியர் பாபு வாழ்த்திபேசினார். ஆசிரியர் தாரிணி நன்றி கூறினார். தீர்மானங்கள் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை களிலும், கடலோரப் பகுதிகளான எண்ணூர் தொடங்கி பழவேற்காடு வரையிலான கடலோர ஒழுங்குமுறை மண்ட லம மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட தொழிற்சாலை பகுதிகளிலும் காற்று மாசு அளவீட்டுக் கருவிகளை வைத்து கண்காணிக்கும் திட்டத்தை இனிவரும் மூன்று மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகக் கடலோரம் முழுவதும் திட்டமிட்டு கட்டப்பட்டு வரும் தொடர் மெகா துறைமுகங்கள் அமைப்பதற்கு மறு பரிசீலனை செய்யவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.