tamilnadu

img

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண ஆட்சியர் நடவடிக்கை

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண ஆட்சியர் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி,பிப். 25 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 609 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டுகிறது. அந்த வகையில் 24.2.2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 574 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 35 மனுக்களும் என மொத்தம் 609 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில்  15 முதல்வர் மருந்தகங்கள்

கள்ளக்குறிச்சி, பி ப். 25 - சென்னையில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1.000 மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திங்களன்று பிப். 24) திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகண்டை கூட்ரோடு பகுதியில் கே. அரியலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முதல்வர் மருந்தகம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது முதல்வர் மருந்தகங்களின் சேவைகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி கூட்டுறவுத் துறை சார்பில் வாணாபுரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, வடக்கனந்தல்,கே.ஆலத்தூர்,மணலூர் பேட்டை, எலவனாசூர்கோட்டை ஆகிய 7 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், துணைப்பதிவாளர் சுரேஷ், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் தலைவர் வடிவக்கரசி சாமி சுப்பிரமணியன், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.