பர்வானி, ஏப்.4-
மத்தியப்பிரதேச மாநிலம் கார்கனே மக்களவைத் தொகுதிக்கு மே 19-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், கார்கனே தொகுதியில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, அவர்கள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதனொரு பகுதியாக, பாஜக தலைவர் சஞ்சய் யாதவுக்கு சொந்தமான வீட்டிலும் சோதனையிட்டுள்ளனர்.அப்போது சஞ்சய் யாதவ் வீட்டில் ஏராளமான வெடிகுண்டுகள், 10 கைத்துப்பாக்கிகள், 111 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 வெடிகுண்டுகள் மிகவும்சக்தி மிக்கவை என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த காவல்துறைக்கண்காணிப்பாளர் யாங்சென் டோல் கார் புட்டியா, “கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் வெளிநாட் டைச் சேர்ந்தவை” என்றும், “இதுதொடர்பாக சஞ்சய் யாதவ், சாகர் சவுத்திரி, தீபக், ஹிரித்திக் ஆகியோர் மீது வெடிகுண்டுகளை பதுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சஞ்சய் யாதவ், முன்பொரு முறை நீதிமன்றத்திற்கு உள்ளேயே சென்று எதிராளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்றும், அவர் மீது 47 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உள் ளாட்சித் தேர்தலில், சஞ்சய் யாதவ், தனது தாயாரை சேத்வா நகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட வைத்திருக்கிறார். அப்போது சஞ்சய் மீதான பயத்தில் வேறு யாருமே வேட்புமனு செய்யவில்லை என்றும், இதனால், போட்டியே இல்லாமல் தனது தாயாரை சஞ்சய் வெற்றிபெற வைத்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.