tamilnadu

img

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது

லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்த ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே. 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவர்.  

அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான ரகசிய ஆவணங்களைத் தன் இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அவரை கைது செய்ய முயற்சித்தது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் இரு பெண்கள் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் வன்முறை செய்தற்ததாக குற்றம் சாட்டினர். 

இதையடுத்து ஸ்வீடன் நீதிமன்றம் அவரை பாலியல் குற்றவாளியாக அறிவித்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, தான் வெளியிட்ட ஆவணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சதி செய்து பொய் குற்றம் சுமத்துவதாகக் கூறினார். 

இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவிற்கு ஈக்குவடார் ஆதரவு அளித்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே தஞ்சம் அடைந்தார். அவர் 7 ஆண்டுகளாக தூதரகத்திற்கு உள்ளே தங்கி இருந்தார். இதையடுத்து ஈக்குவடார் தற்போது ஜூலியன் அசாஞ்சேவிற்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டது. இந்நிலையில் இன்று ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்துள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அசாஞ்சேவை கைது செய்த காவல் துறையினர்“ ஈக்குவடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சே தான் ஒருவேளை ஸ்விடனுக்கு அனுப்பபட்டால் தான் அமெரிக்காவால் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் ஈக்குவடார் தூரகத்தின் முன் பத்திரிகையாளரும், அசாஞ்சேவன் ஆதரவாளருமான ஜான் பில்கர் அசாஞ்சேவை பாதுகாக்கும்படி போராட்டம் ஒன்றை நடத்தினார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டரம்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இமெயில் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அசாஞ்சே மீது குற்றச்சாட்டியது. இதனைத் தொடர்ந்து அசாஞ்சேவுக்கு இணையதளம் மறுக்கப்பட்டு 24 மணி நேரமும் அவர் கண்காணிக்கப்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.