tamilnadu

img

கொடைக்கானல் நிலப்பிளவு - நாளை அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி வனப்பகுதி நிலத்தில், சுமார் 300 அடிக்கு ஏற்பட்டுள்ள பிளவை நாளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் அருகே மேல்மலையில் உள்ள கடைசி கிராமமான கீழ் கிளாவரை பகுதிக்கு செருப்பன் ஓடையிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டுசெல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால் கீழ் கிளாவரை பகுதியிலிருந்து சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர். கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்துக்கு மேல் நிலம் தனியாக பிளந்து இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்; குடிதண்ணீர் மற்றும் வயல்வெளிகளுக்கு பாய்ச்சும் நீர் இந்த பகுதியில் இருந்து மட்டுமே வருவதாகவும், விரைந்து வந்து இப்பகுதியை ஆய்வு செய்து தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.