திருவனந்தபுரம்:
பிப்ரவரி மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், மார்ச்,ஏப்ரல், மே மாதங்களுக்கான ரூ.5250 கோடி வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது எனவும் கேரள நிதி அமைச்சர் டாக்டர். டி.எம்.தாமஸ் ஐசக் கூறினார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த தாமஸ் ஐசக் மேலும் கூறியதாவது: கோவிட் காரணமாக வரி வருவாய் குறைந்துள்ளது. 14 சதவீதம் அதிகரிப்புக்கு மையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இல்லையெனில், அந்த இடைவெளியை ஈடுசெய்ய வேண்டும். வரி வருவாய் கடந்தஇரண்டு மாதங்களாக கிட்டத்தட்ட பாதிகூட இல்லை. செஸ்ஸை பொறுத்தவரை விற்பனை குறைந்ததால் சுருங்கிவிட்டது. செஸ்ஸில் ரூ.8,000 கோடி மத்திய அரசிடம் உள்ளது. இது கோவிட் பிரச்சினை என்று மத்திய அரசு கூறுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கடன் பெற்று மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கேரளம் கோரியது. கடனுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இது மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்காது.ஜிஎஸ்டி கவுன்சில்தான் கடன் பெறுகிறது என்றும் அமைச்சர்தெளிவுபடுத்தினார்.
கடன் வாங்கியாவது இழப்பீடு வழங்குவது சட்டப்படி மத்திய அரசின் பொறுப்பு என்று ஐசக் கூறினார். ஜிஎஸ்டிநிலுவை ரூ.5250 கோடி உள்ளது. கோவிட்டின் போது எந்தவிதமான வரியையும் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்பது பொதுவான கருத்து. வரி வருவாயில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் பொருளாதாரம் மெதுவாக மேம்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஏப்ரல் மாதத்திற்கான மொத்த வசூல்ரூ.390 கோடியாகும். பின்னர் அது அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் விளக்கினார்.