கரூர்:
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் ஆரியூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கருப்புசாமி (83) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
இதுகுறித்து கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தனது அறிக்கையில் கூறியதாவது:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சி கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து வந்தார். 1980ம் ஆண்டுகளில் க.பரமத்தி ஒன்றியம், ஆரியூர் கிராமத்தில் சாதி ஆதிக்கவாதிகள் பட்டியலின மக்களுக்கு சமூக கட்டுப்பாடுகளை விதித்து புறக்கணித்த போது, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் பக்கம் அரணாக நின்று உறுதியான போராட்டத்தை நடத்திய முன்னணி தோழர் கருப்புசாமி. கட்சி மேடைகளில் இயக்க பாடல்களை பாடுவதின் மூலம் இப் பகுதி மக்கள் மத்தியில் மிகவும் அறிமுகமானவர்.
தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வங்கி கணக்கில் உள்ள ரூ.3 ஆயிரத்தை கட்சியின் தேர்தல் நிதிக்கு அளிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். தனது கடைசி மூச்சு இருக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த தோழர் கருப்புசாமியின்இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்றாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோசிமின், கே.வி.கணேசன், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கே.வி.பழனிச்சாமி, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, டிஎன்பிஎல்ராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.