tamilnadu

img

தலித் எம்.பி.க்கு தீண்டாமைக் கொடுமை!

பெங்களூரு:
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, அவர் தலித் என்பதற்காக ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து வெளியேற்றிய சம்பவம், கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. பாஜக-வின் மூத்த தலைவரும் சித்ராதுர்கா தொகுதியின் எம்.பி.யுமாக இருப்பவர் நாராயணசாமி. இவர், திங்கட்கிழமையன்று பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்காக, தும்கூர் மாவட்டத்திலுள்ள பாவாகடா தாலுகாவில் யாதவர்கள் அதிகம் வசிக்கும் கோலாரஹட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார்.அவருடன் பைகான் மருந்து நிறுவன ஊழியர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில், எம்.பி. நாராயணசாமி கிராமத்துக்குள் நுழைவதற்கு, அங்குள்ள மக்கள் அனுமதி மறுத்துள்ளனர். ‘தலித் மக்களை நாங்கள் கிராமத்துக்குள் அனுமதிப்பதில்லை’ என்பதால், நாராயணசாமி எம்.பி.யையும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.கிராம மக்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்திற்காகவே எம்.பி. நாராயணசாமி வந்துள்ளார் என்று, உடனிருந்தவர்கள் எவ்வளவோ கூறியும், கடைசி வரை, கிராம மக்கள் நாராயணசாமியை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். கிராமத்துக்கு வெளியிலேயே உட்காருமாறு கூறியுள்ளனர். இதனை அவமானமாக உணர்ந்த நாராயணசாமி எம்.பி. கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளார்.