சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்திய ரயில்வே துறை முதற்கட்டமாக 1,000 டீசல் இன்ஜின்களை மின்சாரத்தில் ஓடும் இன்ஜின்களாக மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.
ரயில்வே துறையில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அகலப்பாதைகளையும் மின்மயமாக்க மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. தற்போது 61,680 கி.மீ. அகலப்பாதைகளில் 50 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் மின்சார ரயில் இன்ஜின்கள் மூலம் இயக்கினால் மட்டுமே இதற்கான பயனைப் பெற முடியும். எனவே, முதற்கட்டமாக 1,000 டீசல் இன்ஜின்களை மின்சார இன்ஜின்களாக மாற்றும் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
மின்சாரப் பாதைகளில் மின்சார இன்ஜின் ரயில்கள் இயக்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி எரிபொருள் சேமிக்க முடியும் என ரயில்வே அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
தற்போது உள்ள ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான டீசல் இன்ஜின்களைக் கைவிடாமல் படிப்படியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதே அளவுக்கு புதிய மின்சார இன்ஜின்களை வாங்கினால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும். எனவே, தற்போது புதிய தொழில்நுட்பங்கள் மூலம் டீசல் இன்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “ரயில்வேயில் மின்மயமாக்கப்பட்ட பாதைகள் அதிகரித்து வருவதால் மின்சார ரயில் இன்ஜின்களின் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள டீசல் இன்ஜின்களை மின்சார ரயில் இன்ஜின்களாக மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள டீசல் லோகோமோட்டிவ் தொழிற்சாலையில் முதல்முறையாக 2,600 குதிரை திறன் கொண்ட சரக்கு ரயில் வகை டீசல் இன்ஜின் 5,000 குதிரைத்திறன் கொண்ட மின்சார இன்ஜினாக 69 நாட்களில் மாற்றப்பட்டது. இதற்கு ரூ.2.5 கோடி செலவு ஆனது. தற்போது, இந்த ரயில் இன்ஜின் சிறப்பாக ஓடுகிறது. எனவே, முதல்கட்டமாக 1,000 டீசல் இன்ஜின்களை படிப்படியாக மின்சாரத்தில் ஓடும் இன்ஜின்களாக மாற்றுவதில் ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது” என்று கூறினர்.