tamilnadu

img

மாநிலங்களை பிச்சைக்காரர்கள் ஆக்க முயற்சிக்கிறது.... பிரதமரின் நிதித் தொகுப்பு ஒரு மோசடித் திட்டம்!

ஹைதராபாத்:
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அறிவித்த ரூ. 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பில் மாநிலங்களுக்கென எந்த நிதியையும் ஒதுக்காத மத்திய அரசு, மாநில அரசுகள் சுயமாக கடன் வாங்குவதற்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், “பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு பொருளாதாரம் திட்டம், உண்மையில் ஒரு மோசடித் திட்டம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:‘’மத்திய அரசு அறிவித்த தற்சார்பு பொருளாதாரத் திட்டம் உண்மையான மோசடித் திட்டம். வெறும் எண்களை மட்டும் கூறி மாநிலஅரசுகளுக்கும், மக்களுக்கும் மோடி அரசு துரோகம் விளைவிக்கிறது. இதைப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் என அழைக்க முடியாது. சர்வதேச பத்திரிகைகள் எல்லாம் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார்கள். நிதியமைச்சர் உண்மையாகவே ஜிடிபி-யை உயர்த்தத் திட்டமிடுகிறாரா அல்லது ரூ. 20 லட்சம் கோடி எண்களை அடைவதற்காக அறிவிப்புகளை வெளியிடுகிறாரா என்று கேட்கிறார்கள்.

மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு வேடிக்கையான கட்டுப்பாடுகளைக் கூறி மத்தியஅரசு தன்னுடைய மரியாதையைத் தானே குறைத்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய இக்கட்டான நேரத்தில் பொருளாதார நிதித்தொகுப்பு மாநிலங்களுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், மத்திய அரசின் மனப்போக்கு நிலப்பிரபுத்துவக் கொள்கை போலவும், எதேச்சதிகார மனப்போக்கை கொண்டதாகவும் உள்ளது. இதை நாங்கள் முழுமையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் இதுபோன்ற திட்டங்களை கேட்கவில்லை.கொரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசுகளின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோருகிறோம். ஆனால், நிதி உதவி கேட்கும் மாநிலஅரசுகளை, பிச்சைக்காரர்களைப் போல மத்திய அரசு நடத்துகிறது.மாநிலங்கள் தங்கள் நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் 2 சதவிகிதம் கூடுதலாகக் கடன் பெற அனுமதித்து விட்டு, கடனை வாங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கிறது. அந்த நிபந்தனைகள் நகைச்சுவையாக உள்ளன. கடனைத் திருப்பிச்செலுத்தப் போவது மாநில அரசுகள்தானே தவிர மத்திய அரசு அல்ல. 

கூட்டாட்சி முறையில் இதுபோன்ற கொள்கையைப் பின்பற்ற முடியாது. அனைத்திற்கும் மத்திய அரசு என்றால், மாநிலஅரசுகள் எதற்கு? அரசியலமைப்புச் சட்டப்படிதான் மாநில அரசுகள் இயங்குகின்றன. மத்தியஅரசின் கீழ் அல்ல.கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயல்படுவதும், மாநிலஅரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடிகூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால்,எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது’’.இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.