ஈரோடு, ஏப்.11-ஈரோடு மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் மணிமாறன், கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காதது, அக்கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் செவ்வாயன்று மாலை, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றபிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஈரோடு அதிமுக வேட்பாளர் மணிமாறனுக்கு, தகவல் கொடுத்தும் அவர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, பாஜகவினர் கூறுகையில், ஈரோடு வேட்பாளருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். ஈரோட்டில் அதிமுக சற்று பின்தங்கி உள்ளதால், இக்கூட்டத்துக்கு வரவேண்டாம் என அதிமுகவினர் கூறியதால் அவர் வரவில்லை என்றனர். மணிமாறனை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் எடுத்தார்.அவரிடம் கேட்டபோது, “பிரதமர் கூட்டத்துக்கு மதியம் தாமதமாகத்தான் அழைப்பு கிடைத்தது. வேட்பாளர் தூரமாக பிரச்சாரத்தில் இருந்ததால், உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தாமதமாக அழைத்தால் என்ன செய்வது, வேற எந்த பிரச்சனையும் இல்லை” என்றார். இப்பகுதி தேர்தல் பொறுப்பாளரான, அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, “வேட்பாளர்களுக்கு தாமதமாகவே அழைப்பு விடுக்கப்பட்டதால், பங்கேற்க இயலவில்லை. தவிர, தீவிர பிரச்சாரம் நடப்பதால், அவர் உடனடியாக வர முடியாத நிலை ஏற்பட்டது. வேறு பிரச்சனை ஏதுமில்லை,” என்றார்.ஆனாலும் பாஜக., அதிமுக கூட்டணிக்குள் இது சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
தினமலர் செய்தி