சென்னையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி 176வது வார்டில் அதிமுக சார்பில் எம்.ஏ. மூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் வே.ஆனந்தம் போட்டியிடுகின்றனர்.
சென்னை வேளச்சேரி சசி நகரில் நேற்று இரவு அதிமுக வேட்பாளர் எம்.ஏ.மூர்த்தியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திமுகவினர் 2 பேரை பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த சுகுமார், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 23,000 ரூபாயையும் வேளச்சேரி போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதனைதொடர்ந்து தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.