இஸ்ரோ தலைவர் தகவல்
பெங்களூரு,ஜூன் 11- கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப் படுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ( இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2018 ஆகஸ்டு 15 அன்று தில்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தின்படி, 2022 ஆம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் 4 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண் கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோத னை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது. இந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஆளில்லா விண் கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. கொரோனா பாதிப்பு மற்றும் நிதி பிரச்சனை காரணமாக திட்டம் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டு இறுதியில் செலுத்தப் படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப் படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.