tamilnadu

img

ஐபிசி நடைமுறைகளில் கடன் கொடுத்தவர்களின் பணம் திரும்ப கிடைப்பது 200% சாத்தியம் - ஐபிபிஐ தலைவர்

ஐபிசி சட்டத்தின்படி எடுக்கப்படும் கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்கள் மீட்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடன் கொடுத்த வங்கிகளுக்கு பணம் திரும்ப கிடைப்பது 200 சதவீதம் சாத்தியம் என்று திவால் ஆணைய (ஐபிபிஐ) தலைவர் எம்.எஸ்.சாஹூ தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஹாங்காங்கில் நடைபெற்ற திவால் சட்ட நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஐபிபிஐ தலைவர் எம்.எஸ்.சாஹூ பேசியதாவது: “ஐபிசி சட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கடனை திருப்பிச் செலுத்துவது என்பது ஒரு ஆப்ஷனாக இல்லாமல், அது கட்டாயமாக மாறியுள்ளது. திவால் நடவடிக்கை விஷயத்தில் பொறுமை காப்பது என்பதும் பழைய கதையாகிவிட்டது. கடனைத் திருப்பிச் செலுத்தாமல் திவால் ஆன நிறுவனங்கள் மீது கடன் கொடுத்தவர்கள் கார்ப்பரேட் ஐபிசி நடைமுறைகளைச் செயல்படுத்தலாம்.

அதன் மூலம் கடன் கொடுத்தவர்கள் திவால் நிறுவனங்களின் மீதான அதிகாரத்தை எடுத்துக்கொண்டு திவால் நடைமுறைகளைச் செயல்படுத்தலாம். எனவே திவால் நடைமுறைகள் மூலம், பங்குகளை தன் வசம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் அந்நிறுவத்துக்கு உரிமையாளராகிவிட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. திவால் நடைமுறைகளில் கடன் கொடுத்தவர்களுக்கு 200% பணம் திரும்பக் கிடைக்கும் சாத்தியம் உருவாகியுள்ளது.

அதேசமயம், கடன் கொடுத்தவர்கள், திவால் நடவடிக்கை எடுக்க உள்ள நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் திவால் நடவடிக்கை ஏன் எதற்காக எடுக்கப்படுகிறது என்ற விளக்கத்தை அளிப்பதும் அவசியம். அதேபோல் திவால் ஆன ஒரு நிறுவனத்தின் மீது திவால் நடைமுறைகளைச் செயல்படுத்தாமல் இருப்பதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.