tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்குத் தேவை ஆதரவும் அரவணைப்பும் மனவலிமையுமே!

இதுவரை காணா பேரிடரை தற்போது உலகம் சந்தித்துக் கொண்டிருக்கையில், மனஅழுத்தத்தாலும், தனிமைப்படுத்துதல் என்னும் பெயரில் அதீதமாக ஒதுக்கப்படுவதாலும் கொரோனாவின் பெயரால் உயிரிழப்போர் சமீபமாக அதிகரித்து வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து பூரண குணமடைந்து வீட்டுக்கு வந்தவர் தன் மனைவி மற்றும் பேரன் வீட்டிற்கு வராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், உலகம் முழுவதும் தன் நேர்த்தியான அல்வா சுவையால் பிரபலமான திருநெல்வேலி அல்வா கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், ஒருவருக்குப் பிறரிடமிருந்து தேவைப்படும் மனரீதியான பலம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது. தனது மன வலிமையால் கொரோனாவை வென்று காட்டிய 106 வயதான தில்லியைச் சேர்ந்த முதியவரும் அச்சத்தினாலேயே தற்கொலையைத் தேர்வு செய்யும் பலரும் நம் இந்தியாவில்தான் அதிகமாக இருக்கின்றனர்.

கொரோனா நோயாளிகளை மனரீதியாகத் தயார்ப்படுத்த அரசு மருத்துவமனைகளில் சில ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டபோதும், நோய்த்தடுப்புப் பணிகளே சில இடங்களில் போதாமல் இருக்கிறபோது இது எந்தளவு பயனளிக்கிறது என்பதை விமர்சிப்போரும் குறைவே. தற்போதைய சூழ்நிலையில், இவ்வாறு அதிகரிக்கும் தற்கொலை மரணங்களைத் தவிர்க்கவும், மக்களும் சுற்றத்தாரும் கொரோனா நோயாளிகளை எவ்வாறு மனரீதியாக தயார்ப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சில மனநல மருத்துவர்கள் கூறியது:

ஆதரவே அடைக்கலம்
கோவை வழிகாட்டி மனநல மையத்தின் இயக்குநரும் மனநல மருத்துவரும், பேராசிரியருமான டாக்டர் செல்வராஜ் கூறுகையில், கொரோனாவைப் பொறுத்தவரை சமுதாயத்தில் இதுகுறித்த பயம் பரவலாக உள்ளது.நூறில் 85 சதவீதத்தினருக்கு எவ்வித ஆபத்தும் இல்லாதபோதும், மீதியுள்ள அந்த 15 சதவீதத்திற்குள் தான் வந்துவிடுவோமோ என்ற பயம் சாதாரணமாக அனைவரிட த்திலும் உள்ளது. இம்மனநிலையால் பல குடும்பச் சிக்கல்கள் பெருமளவு தற்போது அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு வீட்டில் வழக்கமாக வாக்கிங் செல்லும் பெரியவர் மேல் தற்போது சிறிது வெறுப்பு வர ஆரம்பித்திருக்கும். அவருக்கு என்னவானால் என்ன?வீட்டிலிருக்கும் மற்றவர்கள் நலமுடன் இருக்க வேண்டாமா என்னும் சுயநலம் சிறிதேனும் வீட்டிலுள்ள அனைவரிடத்திலும் எட்டிப் பார்க்கும். ஒரு சில இடங்களில் கொரோனா நோயாளிகளை ஒரு குற்றம் செய்தவரைப் போல் பார்ப்பதும், வேண்டுமென்றே நோயை வாங்கி வந்தவர் போல் பார்க்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்கனவே கொரோனா பயத்தில் உள்ள அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தன் மனநிலையாலேயே சாகடிக்கப்படுகிறார். இவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் குடும்பத்திடமிருந்து ஆறுதலும், ஆதரவும் மட்டுமே. நேரில் வர முடியாவிட்டாலும் தொடர்ந்து தொலைபேசியின் வழியே தொடர்பிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பை நீடித்துக் கொண்டிருக்கலாம். முக்கியமாக, கொரோனா வந்தாலே இறந்து விடுவோம் என எண்ணுவோருக்கு இந்த அரவணைப்பும், ஆதரவும் அதிகமாகவே தேவைப்படும். அவர் முதலில் அதுபோன்ற அறியாமையை அவர்களிடமிருந்து நீக்கிவிட்டு மன ஒற்றுமையால் அவர்களை எப்போதும் அரவணைத்து இருக்க வேண்டும். 
இதுதவிர கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மனநிலையும் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைகளும் இதனால் அதிகரித்துள்ளது. புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் முறைகளை அவர்கள் உணர மன தைரியம் மிக முக்கியம். எங்களை போன்றோரை அணுக முடியா தோருக்கு சொந்த குடும்பமே அவர்களுக்கு ஆறுதல். கொரோனாவைப் பொறுத்தவரை அரசு தரப்பில் மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசகரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், அதன் வீரியம் குறைவாகவே உள்ளது. அரசு இன்னமும் பல மருத்துவர்களை இதற்காக பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

தேவை நேர்மறைச் சிந்தனை
மனநல மருத்துவரான ஷியாமலி கூறுகையில், மக்களுக்கு தற்போது அதிகம் தேவைப்படுவது விழிப்புணர்வு தான். கொரோனா என்பது முற்றிலும் ஆட்கொல்லி நோய் அல்ல, சாதாரண பிற நோய்களைப் போன்று இதிலிருந்தும் விடுபட்டு விடலாம் என்ற எண்ணம் பெரிதாக அவர்களிடம் இல்லை. தினந்தோறும் செய்திகளில் பார்ப்பதை வைத்து அவர்களே ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர். சுற்றியிருப்பவர்களுக்கு எப்படி விழிப்புணர்வு இல்லையோ அதேபோல் தான் நோய்த் தொற்று ஏற்பட்டவருக்கும் அடிப்படை விழிப்புணர்வு இருப்பதில்லை. இம்மாதிரியான சூழ்நிலைகளில் சுற்றத்தார் தான் அதிக கவனத்துடன் அவர்களை மனரீதியாக பாதுகாக்க வேண்டும். சரியான அன்பு கிடைக்காததால் தற்கொலை எண்ணம் ஏற்பட்டவர்கள் ஏற்கனவே கடுமையான மன உளைச்சலில் இருப்பர். இவர்களை அச்சமயத்தில் நெருங்கிப் பேசினாலே அதிலிருந்து அவர்கள் மீண்டு விடுவர்.

தற்போதிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தான். அதுவே அவர்களை வெறுக்க வைக்கும்படி இருந்து விடக்கூடாது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அருகில் செல்லாமல் இருப்பதில்லை, இருந்தும் பாதுகாப்பை மறுக்காமல் இருப்பதில்லை. குடும்பத்தாரும் அவ்வாறான மனநிலையோடு இருக்க வேண்டும். கொரோனா தனிமைப்படுத்துதலில் இருக்கப்போவது 10 நாட்களோ, 14 நாட்களோ தான். அளவுக்கதிகமான ஆதரவு தேவைப்படுவதும் அப்போது தான். எனவே, அதனைத் தரக்கூட நாம் எப்போதும் மறுக்கக் கூடாது. இதுதவிர எது சந்தோஷத்தை தருமோ அதை நோயாளிகள் செய்யலாம். பாட்டுக் கேட்பது, கதைகள் எழுதுவது, அனைவரிடமும் சகஜமாகப் பழகுவது, பாதுகாப்போடு வாக்கிங் செல்வது, டிவி பார்ப்பது என அனைத்தையும் செய்ய தயங்கக்கூடாது. அதேநேரம், நேர்மறைச் சிந்தனைகளையும் அதிகமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று ஷியாமலி குறிப்பிடுகிறார்.

முகக்கவச மனிதர்கள் 
மனநல மருத்துவரான உமா மகேஸ்வரி பேசுகையில், சாதாரணமாக சாலை விபத்துகளிலும், இன்னபிற நோய்களிலும் பலர் இறக்கின்றனர். அவ்வாறு இறப்பவர்களின் விகிதமானது கொரோனாவால் இறப்பவர்களை விட அதிகம். இருப்பினும், இது ஒரு நோய்என்பதைத் தாண்டி உயிர்க் கொல்லியின் மறு வடிவமாக மக்கள் அதை நினைத்து தேவையில்லாமல் அச்சப்படுகின்றனர். மேலும் தன்னால் தன் குடும்பத்திற்கும் பாதிப்பு வந்து விடுமோ என்ற பயமும் சில நாட்களாகபலரிடம் அதிகரித்து வருகிறது. ஒருவருக்குக் கொரோனா வருகிறதென்றால் தனிமைப்படுத்த வேண்டும் என்பதுசரியான நடவடிக்கையாக இருக்கும் என்கிற போதும் கூட, எப்போதும் முகக்கவச மனிதர்களையே பார்த்துக்கொண்டிருப்பதும் அவர்களுக்கும் ஒருவித அச்சத்தை உண்டாக்கும். அதுவே அம்மாதிரியான மனநிலைக்கு வருவதற்கு முதல் படியாகவும் அமையும். 

சாதாரணமாக நோயாளிகளைப் பொறுத்த வரை மருத்துவர்களின் முகம் தான் அவர்களுக்கு பலமே. ஆனால் தற்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. மேலும் தன் அருகிலிருந்த சக நோயாளி இறப்பதையும், அந்த உடல் அப்புறப்படுத்தப்படுவதையும் பார்க்கும் போது அதிகமான மன உளைச்சல் ஏற்படும். இன்னும்நிறைய மருத்துவமனைகளில் தொலைபேசி பயன் படுத்துவதையும் தவிர்க்கச் சொல்வதால் இருக்கும் ஒரு நம்பிக்கையையும் இழந்ததாக அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், நோயாளிகளை விட அவர்களின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் தான் மருத்துவ ஆலோசனை அதிகம் தேவை. “நீங்கள் போராட வேண்டியது நோயுடன் தான், நோயாளியிடம் அல்ல” என்னும்வாசகம் கூட எதிரிலிருப்பவர் எப்போது பேசுவான் என்னும் எரிச்சலில் தான் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். எனவே முதலில் நாம் மாறி, பின் அவர்களைத் தேற்ற கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் உமா மகேஸ்வரி.

படிப்பினையைப் பயிலும் மக்கள்
கோவை மனம் ஹெல்த் கிளீனிக்கின் மனநல மருத்துவரான நவீன் குமார் கூறுகையில், கொரோனா வந்து விடும் என்ற பயத்தையும் தாண்டி, அது வந்தால் நாம் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டு விடுவோம் என எண்ணும் நிலை தான் தற்போது பெரும்பாலானோரிடத்தில் உள்ளது. எனவே கொரோனா வந்தால் இந்நடவடிக்கைகள் தான் பின்பற்றப்பட வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் வேண்டும். மேலும், கொரோனா பற்றிய அச்சம் எப்போது அதிகரிக்கும் எனில் முகக்கசவ மனிதர்களை அதிகம் மருத்துவமனைகளில் எதிர்நோக்கும் போது தான். பிறந்ததிலிருந்து மனித முகங்களாலேயே உலகத்தை நிரப்பியவர் அதைப் பார்க்காமலேயே தான், கொடிய நோயிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணும்போது மனரீதியாக அதிகம் பாதிக்கப்படுவார்.தற்போது கொரோனா அச்சத்தாலும், குடும்பப் புறக்கணிப்புகளாலும் உயிரிழந்த நோயாளிகள் குறித்த செய்திகளை பிரபலமாக்குவதே ஒரு வகையான தவறு தான். அது மக்களை இன்னும் தான் அச்சப்பட வைக்கும். இதுகுறித்து மனநல மருத்துவர்களோ, சுகாதாரத் தொண்டர்களோ சரியான ஆலோசனைகள் வழங்காததாலேயே இம்மாதியான பார்வைகள் பிரபலமாக்கப்படுகிறது. இதையெல்லாம் பெரும்பாலும் தவிர்க்க அரசு சொல்வதைக் கேட்டாலே போதுமானது. தமிழகத்தைப் பொறுத்தவரை பரிசோதனைகளும் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நம் மாநிலத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களின் விகிதம் நாட்டிலேயே அதிகம். எனவே படிப்பினையோடு புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் நம் மக்கள். ஆக இக்கொரோனா காலத்தையும் நம் மக்கள் அறிவியல் அறிவோடு கடந்து விட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

தொகுப்பு : ச.காவியா