கோயம்புத்தூர், நவ. 21- பழங்குடியின மக்களின் நிலம் அபகரிப்பு, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு என ஈஷா மையம் சமூக விரோதக் கூடாரமாகத் திகழ்வதாகவும், ஈஷா யோகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்காவிட்டால் மாநில அளவில் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்து கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்தும், ஈஷா மையம் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று 500க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈஷா யோகா மையம் அமைந்துள்ள இருட்டுப்பள்ளம் பகுதியில் போராட்டம் நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் உள்ள ஆலந்துறை பகுதியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் பதாகைகளுடன் பங்கேற்று ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் பி.சுகந்தி துவக்கி வைத்தார். இதில், மாதர் சங்கத்தின் மாநிலத்தலைவர் வாலண்டினா, மாநிலச்செயலாளர் பவித்ரா தேவி மற்றும் மாவட்டச்செயலாளர்கள் நீலகிரி ஆதிரா, ஈரோடு லலிதா, தருமபுரி மல்லிகா, திருப்பூர் சரஸ்வதி, சேலம், தேவி, கோவை சுதா, மாவட்டத் தலைவர் ஜோதிமணி, பொருளாளர் உஷா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் சமூக நீதி மகளிர் சங்கத்தின் தலைவர் கிரிஜா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.