tamilnadu

img

நிலத்திற்கான நிதியை கொடு அல்லது நிலத்தை கொடு - பெ.சண்முகம் தலைமையில் விவசாயிகள் போரட்டம்!

கோவை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1980 ஆண்டு கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க சுமார் 600 விவசாயிகளிடமிருந்து,  916 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் அதற்கான உரிய தொகையை வழங்கவில்லை என கூறி விவசாயிகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து ரூ.160 கோடி தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையையும் அரசு வழங்கவில்லை.
இதனால் விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2022-இல் வட்டியுடன் சேர்த்து ரூ.350 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் தொடர்ந்து அரசு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நிலத்திற்கான நிதியைக் கொடு அல்லது நிலத்தைக் கொடு என வலியுறுத்தி, தீர்வு எட்டும் வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலிலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.