tamilnadu

img

“ஐரிஸ் தேனா கப்பல் மூழ்கடிப்பு: இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட பேரழிவு” - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் விமர்சனம்!

“ஐரிஸ் தேனா கப்பலின் மூழ்கடிப்பு என்பது வெறும் ஒரு கப்பலின் அழிவு மட்டுமல்ல; சுதந்திரமான இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பேரழிவு” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஊடகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா நடத்திய 'மிலன் 2026' (MILAN 2026) பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் ஒரு கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுவிட்டுத் தனது தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் 'ஐரிஸ் தேனா' போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு மண்டலத்திற்கு அருகிலேயே, எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்துவது நமது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். மிலன் பன்னாட்டுப் பயிற்சி என்பதே “கடற்கொள்ளை, ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் பயங்கரவாதம் போன்ற நவீனகால கடல்சார் அச்சுறுத்தல்களைக் கூட்டாக எதிர்கொள்வதற்கானதுதான்”. ஆனால் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பியவர்களை நவீன கொள்ளையர்கள் போல் தாக்கி அழித்திருக்கிறது அமெரிக்கா.

"சர்வதேசக் கடல் பகுதியில், எவ்விதப் போரிலும் ஈடுபடாத ஒரு கப்பலைத் தாக்கி 87-க்கும் மேற்பட்ட மாலுமிகளைக் கொன்றிருப்பது ஒரு சர்வதேசக் குற்றம். இது ஐநா சாசனத்தையும் கடல்சார் விதிகளையும் (UNCLOS) அப்பட்டமாக மீறுவதாகும். ஆனால் இது பற்றி வாய்திறக்க மறுக்கிறது மோடி அரசு.

மிலன் பயிற்சி விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், “ஒரு சிறந்த கடல்சார் ஒழுங்கு என்பது 'கூட்டுப் பொறுப்பு' மற்றும் 'கூட்டு நடவடிக்கை' ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்”. ஆனால் இந்தப் பேரழிவுக்கு எதிரான தனது கண்டனத்தைக் கூடப் பதிவு செய்ய மறுக்கும் மோடி அரசு, கூட்டுப் பொறுப்பு பற்றி உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்குகிறது.

'கடல்கள் மூலம் ஒன்றிணைவோம்' (United Through Oceans) என்ற கருப்பொருளில் இந்தியா நடத்திய நிகழ்வுக்கு வந்து சென்ற விருந்தினர்களைப் பிணங்களாக்கி மிதக்கவிட்டுள்ளது அமெரிக்கா. இவ்வளவு பிணங்கள் மிதந்தாலும் மோடியின் மௌனம் ஏன் கலைய மறுக்கிறது?

ஐரிஸ் தேனா கப்பலின் மூழ்கடிப்பு என்பது வெறும் ஒரு கப்பலின் அழிவு மட்டுமல்ல; சுதந்திரமான இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பேரழிவும்தான். விஷ்வ குரு தனது விருந்தினர்களின் மரணத்தைக் கூடக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

“இந்த நிகழ்வில் 74 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 85 கப்பல்கள் மற்றும் 29 விமானங்கள் பங்கேற்றது இந்தியாவின் கடல்சார் ராஜதந்திரத்தின் ஒரு மைல்கல்” என வர்ணித்த பாஜக தலைவர்கள், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவால் மிதக்கவிடப்பட்ட இந்தப் பிணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஐரிஸ் தேனா கப்பல் தாக்கப்பட்ட மறுநாளே, மற்றொரு ஈரானியக் கப்பலான 'ஐரிஸ் புஷெர்' இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்தது. 208 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பல் தனது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறி இலங்கையிடம் அவசர உதவி கோரியுள்ளது. இந்த கோரிக்கையின் மீது இலங்கை அரசு ஒரு நடுநிலையான, அதேசமயம் மனிதாபிமானம் மிக்க முடிவை எடுத்து, ஈரானியக் கப்பலுக்குத் தஞ்சமளித்துள்ளது.

வல்லரசுகளின் நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஒரு சிறிய நாடு எடுத்த மிகவும் துணிச்சலான மற்றும் மனிதாபிமானம் மிக்க முடிவாகும். ஐரிஸ் தேனா கப்பல் அழிக்கப்பட்டபோது இந்தியா காட்டிய மௌனம், அதன் இராஜதந்திரக் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடென்றால், இலங்கை தனது எல்லையில் நிகழ்ந்த இந்த அநீதிக்கு எதிராகத் தனது இறையாண்மையையும், சர்வதேசச் சட்டங்களையும், மனிதாபிமானத்தையும் உயர்த்திப் பிடித்துள்ளது.

இலங்கை அரசு எடுத்த இந்த முடிவு, மாலுமிகளின் உயிரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலில் சிறிய நாடுகளும் தங்களது தனித்துவமான வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்ட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒருபுறம் மிலன் பயிற்சியில் ஈரானை அழைப்பது, மறுபுறம் அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டிக்க மறுப்பது.

“வசுதேவ குடும்பகம்”, “அதிதி தேவோ பவ” என்பதெல்லாம் வாய்ச்சொல்தான். செயலெல்லாம் அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் மட்டும்தான். தனது அழைப்பின் பேரில் வந்த ஈரானியக் கப்பலை அழித்த அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுக்கிறார் மோடி. இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு வெட்கமற்று அர்ப்பணிக்கிறார்.

உதவி கேட்ட ஈரானியக் கப்பலுக்குத் தஞ்சமளித்ததன் மூலம் தனித்துவமான வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்ட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி. நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைப்பாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையைப் பாதுகாக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.