பொள்ளாச்சி, ஏப். 28-பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதியில் தனியார் ஆம்புலன்சுகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உடுமலை பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என நாளொன்றிற்கு 2000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து செல்கின்றனர். இப்பகுதியை ஒட்டியே உடுமலை, தாராபுரம், பழனி, திண்டுக்கல் , மதுரை உள்ளிட்ட பேருந்துகளும், பொள்ளாச்சி கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களுக்கும் 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள்இவ்வழியாக இயக்கப்படுகின்றன. இதுதவிர இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் ஏராளமாக இவ்வழியில் செல்கின்றன.இப்பகுதியில் அவ்வப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தனியர் ஆம்புலன்சுகளை அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் ஒட்டிய வளாகத்தில் நிறுத்தப்படுவதே ஆகும். இவ்வாறு நிறுத்தப்படுவதனால் பாதசாரிகளும் , 108, அரசு ஆம்புலன்ஸ் வாகனங்களும் , அரசு மருத்துவமனைக்குள் செல்வது மிகவும் சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, தனியார் ஆம்புலன்சுகளை அரசு மருத்துவமனை வளாகம்ஒட்டி பொதுமக்களுக்கு இடையூறுஏற்படுத்தக்கூடிய வகையிலும் நிறுத்தக்கூடாது. இதற்கென தனியேஅனுமதிக்கப்பட்ட இடத்தையே பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.