tamilnadu

img

எஸ்எஸ்எல்சி தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் திருப்பூர் மாவட்ட மாணவர்கள் சாதனை

திருப்பூர், ஏப். 29 –தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்ட மாணவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே பிளஸ் 2 பொதுத்தேர்விலும் திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.ஒரே கல்வி ஆண்டில் பிளஸ் 2மற்றும் எஸ்எஸ்எல்சி அரசுப்பொதுத் தேர்வு என இரண்டிலும்திருப்பூர் மாவட்டம் மாநிலஅளவில் முதலிடம் பெற்றிருப்பதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், திருப்பூர் கல்வித் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.இம்மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 29 ஆயிரத்து153 பேரில், 28 ஆயிரத்து 723 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.53சதவிகிதம் ஆகும். குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்டத்தில் நடத்தப்படும் இரு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய 61 மாணாக்கர்கள் 100சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அரசுப் பள்ளிகளில் 97.62 சதவிகிதம், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் 97.72 சதவிகிதம் அறநிலையத்துறை பள்ளிகளில் 96.32 சதவிகிதம் அளவுக்கு மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகளில் கடந்த 2018 கல்வி ஆண்டைவிட 2 முதல் 5 சதவிகிதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனவேதான் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்து திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் நகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்கு மாவட்டஆட்சியர் பாராட்டும், வாழ்த்தும்தெரிவித்தார்.இம்முறையும் மாணவர் (97.95 சதவிகிதம்) தேர்ச்சி விகிதத்தைவிட மாணவியர் (99.09 சதவிகிதம்) தேர்ச்சி விகிதம் அதிகமாகும். கடந்த 2018ஆம் கல்வி ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.18 சதவிகித தேர்ச்சியுடன் ஏழாம் இடத்தில் இருந்தது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய 346 பள்ளிகளில் 236 பள்ளிகள் 100சதவிகிதம் தேர்ச்சி அடைந்திருக்கின்றன. இதில் அரசு உதவிபெறும் பள்ளிகள் 5, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 2, நகராட்சி பள்ளிகள் 2, அரசுப் பள்ளிகள் 73 மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 137, சுயநிதி பள்ளிகள் 17 ஆகியவை நூறு சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளன.பாடவாரியாக கணிதத்தில் 40 பேரும், அறிவியலில் 103 பேரும்,சமூக அறிவியலில் அதிகபட்சமாக 259 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பழனிச்சாமி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்