tamilnadu

img

இந்தாண்டு டெங்கு தாக்குதல் கடுமையாக இருக்கலாம்

திருப்பூர், மே 29 -திருப்பூரில் இந்த ஆண்டு மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் கடுமையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வந்தபின் தடுப்பதை விட முன்கூட்டியே நோய்த் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை, அரசு நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தனியார் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் கூறியதாவது: தற்போது கடுமையான வெயில் அடித்தபோதும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுக்கள் இருப்பது தெரிய வருகிறது. சில நோயாளிகள் காய்ச்சல் என்று வரும்போது அவர்களுக்கு ஏடிஎஸ் கொசுக்கள் கடித்ததால் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். பொதுவாக வெயில் காலத்தில் டெங்கு கொசு தாக்குதல் இருக்காது. ஆனால் இப்போதிருக்கும் கடுமையான வெப்பம் நிலவும் சூழலிலும் டெங்கு கொசுக்கள் இருப்பது தெரிகிறது. இதே நிலை நீடிக்கும் நிலையில், வரக்கூடிய மழைக் காலத்தைத் தொடர்ந்த பருவத்தில் டெங்கு கொசுத்  தாக்குதல் கடுமையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.பொதுவாக யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன் பிறகே சுகாதாரத்  துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் நோய்த் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றனர். அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் மருந்து தெளிப்பது, தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இப்போதிருக்கும் நிலையைக் கணக்கில் கொண்டால், அதுபோன்ற நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது. எனவே முன்கூட்டியே டெங்குக்  கொசுத்  தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட, மாநகர சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மருத்துவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்கள் தீவிர டெங்கு தாக்குதல் உள்ள பகுதிகள் என சுகாதாரத் துறை வரையறுத்துள்ளது. தமிழக அரசின் சுகாதாரத் துறையில் உயர்பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் இளங்கோ கூறுகையில், ஒரு முறை ஒரு பகுதியில் டெங்கு தாக்குதல் ஏற்பட்டால் 20 ஆண்டுகளுக்கு அதன் பாதிப்பு இருக்கும். எனவே தொடர் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக இந்த வட்டாரத்தில் குறிப்பாக திருப்பூர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது. ஆனால் அரசு நிர்வாகமோ, இது போன்ற சமயங்களில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டுவதற்கே முயற்சி மேற்கொள்கின்றனர்.  டெங்கு காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை, இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை போன்ற விபரங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. டெங்குக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்கும், நேரடியாக டெங்கு என்று சொல்லாமல் மர்மக் காய்ச்சலில் உயிரிழந்தனர் என்றும் சொல்லி திசை திருப்பும் காரியங்களைத்தான் அரசு நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

எனவே தற்போது கோடை காலத்திலேயே ஏடிஎஸ் கொசுக்கள் தென்படும் நிலையில், இப்போதே அனைத்துப் பகுதிகளிலும் இது பற்றி தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். ஏடிஎஸ் கொசுக்கள் நன்னீரில்தான் உற்பத்தியாகி பரவும் என்பதால் பொது இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நன்னீர் வீணாவதையும், சாலை, வீதிகளில் நன்னீர் தேங்குவதையும் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலைக் கண்டறியும் எலிசா எனப்படும் பரிசோதனை உபகரணங்கள் போதுமான அளவுக்கு இருப்பதையும், சிகிச்சைக்குத் தேவையான மருந்து, படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.      (ந.நி)