ஈரோடு, ஏப். 30-பவானி தாலூக்கா ஜம்பை பேரூராட்சியில் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் மீது எந்த கவனமும் செலுத்தாமல் மக்களை வஞ்சித்தும், உயர்த்தப்பட்ட வரி வசூலை தனி கவனம் கொண்டு செய்து வருவதாக மக்களை புகார் தெரிவித்துள்ளனர்.பவானி ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். பேரூராட்சிக்குட்பட்ட சின்னியம்பாளையத்தில் பொதுக்கழிப்பறையில் அனைத்து மின்விளக்குகளும் பழுதாகி பயனற்ற நிலையில் உள்ளது. மேல்காலனியில் இரண்டு வீதிகளுக்கு சாக்கடை கால்வாய் மீது நடைபாதைக்கான கான்கிரீட் (கல்) போட காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. சத்தியமூர்த்தி நகரில் பொதுக்கழிவறையில் உள்ள அனைத்து கதவுகளும் பயனற்ற முறையில் உள்ளது. மின் சுவிட்சுகள் உடைந்துள்ளது. பெரியமோளபாளையத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் சாக்கடைகழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. பல முறை முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல, எம்.ஜி.ஆர்.நகர் காலணியில் தெருவிளக்குகள் கிடையாது. குடிநீர்முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆனால், இந்நிலையில் தான் வரிகள் அனைத்தும் உயர்த்தப்பட்டள்ளது. அவற்றை வசூலிப்பதில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் தனிகவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.