ஈரோடு, மே 10-3 சதவிகித அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த காலங்களில் தேர்தல் காலமாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய தமிழக அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்களை திசை திருப்பும் வேலையை செய்து வருகிறது. எனவே, 1977 ஆம் ஆண்டு முதல் போராடி பெற்றுவந்த அகவிலைப் படியை முடக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும், ஜனவரி 2019 மாதம் முதல் 3 சதவிகித அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, மாவட்ட தலைவர் ஜே.பாஸ்கர் பாபு,மாவட்ட பொருளாளர் உஷாராணி, சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு வட்டக் கிளை தலைவர் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.