tamilnadu

img

உதகைக்கு புது மலைரயில் என்ஜின்

உதகை, ஏப். 29-எட்டு மாதங்களுக்கு முன்பு பழுது நீக்கும் பணிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீலகிரி மலை ரயில் என்ஜின் புதுப்பிக்கபட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் தினசரி காலை 7.10 மணிக்கு சுற்றுலாதளமான உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரியசின்னமாக யுனஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நீராவி மூலம்இயங்கும் இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகள் உள்நாட்டில் இருந்துமட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆர்வமுடன் இங்கு வருகை தருகின்றனர். கோடை காலத்தில் நீலகிரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மலைரயில் காலை 9 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலுக்கு என மொத்தம் எட்டு என்ஜின்கள் உள்ளன. இதில் நிலக்கரி மூலம் இயங்கும் இரண்டு பழைய எஞ்ஜின்கள் பழுதாகி நிற்கின்றன. மீதமுள்ள என்ஜின்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு என்ஜினாக பழுதுநீக்க திருச்சியில் உள்ள ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதன்படி கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மலைரயில் என்ஜின் புதுபிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திங்களன்று மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்தது. கடந்த 2013 ஆண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த நீராவி என்ஜின் சுமார் ஐந்து டன் எடை கொண்டது. இதில் 4500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் மற்றும் 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பர்னஸ் ஆயில் டேங்க் உள்ளது. பழுது நீக்கப்பணிக்காக கொண்டு செல்லப்பட்ட இந்த எஞ்சின் முற்றிலுமாக புதுபிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரிய ட்ரெய்லர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து லாரியில் இருந்து மலைரயில் எஞ்சின் ராட்சதகிரேன் உதவியுடன் தூக்கி இறக்கி வைக்கப்பட்டது. முப்பதிற்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் என்ஜினை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் இந்த எஞ்சின் வழக்கமான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.