தருமபுரி, ஏப்.20-தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டத்தில் கடந்தசில தினங்களாக 100 டிகிரியைதாண்டி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் வெள்ளியன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலையில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக, பாப்பிரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதேபோல், தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததுடன், விவசாய நிலங்களில் பயிரிட்டு இருந்த கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சூறைக்காற்றுக்கு பலத்த சேதமடைந்தது. மேலும் சாலையோரம் இருந்த புளிய மரங்கள் சில முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்தது. விளம்பர போர்டுகள், தட்டிகள் காற்றில்பறந்தன. வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. இந்த சூறைக்காற்றினால் வாழை பயிரிட்டிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு மாவட்ட நிர்வாகத்துக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு
அந்தியூர் பகுதியில் வெள்ளியன்று வீசிய சூறைக் காற்றில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. . ஈரோடு மாவட்டம் தாளவாடியில் வியாழனன்று நள்ளிரவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் எரகநல்லி கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்ததால், பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் உரியநிவாரணம் தர, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல், அந்தியூர் மற்றும் வட்டகாடு, எண்ணமங்கலம், கோவிலூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் இங்கு பயிரிடப்பட்ட கதளி மற்றும் செவ்வாழை ரக வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.