சென்னை:
திமுக தேர்தல் அறிவிப்பாக பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றும் விதமாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
2021- 2022 ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13 வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களிடம் பெருத்த எதிர்ப்பார்ப்புகள் நிலவியது. அதனை நிறைவேற்றும்விதமாகவும் அமைந்திருந்தது.
மேலும், முதல் முறையாக காகிதமில்லா இ-நிதிநிலை அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்பட்டது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளியன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். அவர் சுமார் 3 மணி நேரம் அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் பேசுவது எம்.எல்.ஏ.க்களின் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் கணினி திரையில் வார்த்தைகளாக இடம்பெற்றது. அதுதவிர ‘டேப்ளட்’ கருவியும்எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றிலும் பட்ஜெட் தொகுப்பை காண முடிந்தது.
முதன்முறையாக அமைச்சராக பொறுப்பேற்று நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தபோது 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள், இந்த நிதியாண்டின் மீதமுள்ள ஆறுமாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடந்த சில மாதங்களாக மிகப்பெரும் அளவில் தாக்கியதையும் அதன்பிறகு ஏற்பட்ட சுகாதாரம் மற்றும்பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவுகள், ஏற்கெ னவே கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த அரசை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அடுத்த, ஆறு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யவுள்ள 2022-23 ஆம் ஆண்டிற்கான முழு வரவு-செலவுத் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த திருத்த வரவு செலவு-திட்டத்தின் முதன்மை நோக்கம் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கடன்சுமையை சரிசெய்து நிதி நிலைமையை சீர்படுத்துவதே மக்களுக்கு திமுக அரசு கொடுத்தமுக்கிய வாக்குறுதியாகும். எனவே, ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ செய்து முடிக்கஇயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது என்றும் இதற்கு, குறைந்த பட்சம் இரண்டு, மூன்றாண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.வெளிப்படைத் தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுதல், உறுதியான நடவடிக்கை ஆகிய நான்கு முக்கியகூறுகளுடன் கூடிய இந்த அரசு செயல்படுத்தும் முறையை முதலமைச்சர் ஸ்டாலின் வகுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம். தமிழ்நாட்டு மக்களும் எங்கள் நோக்கத்தையும் துரிதமாகச் செயல்படும் திறனையும் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. தனது வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதன்படி, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 அளவுக்குகுறைக்கப்படும். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியைஉணர்ந்து வரி குறைப்பு செய்யப்படுகிறது. பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000
அரசின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. நிலவும் நிதி நெருக்கடியினால் அனைத்து வாக்குறுதிகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் கடினமாகிறது. அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து கவனமாக அரசு பரிசீலனை செய்துவருகிறது.குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மிக முக்கியமானது. குடும்பத்தின் தலைவர் ஒரு பெண்ணாகஇருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவிகிடைக்கும் என சில தரப்பில் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பலர் குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரைகுடும்பத்தின் தலைவராக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். இத்திட்டத்தின் நோக்கம், நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவதே ஆகும். எனவே, குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.
தொடர்ச்சி 4-ஆம் பக்கம் பார்க்க...
********************
துளிகள்
மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.
கீழடி, சிவகளை, கொடுமணல் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்கள்.
சமூக பாதுகாப்பு, ஓய்வூதியங்களுக்கு ரூ.4,807.56 கோடி ஒதுக்கீடு
காவல்துறையில் 14,317 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அடுத்த பத்தாண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள்.
மீனவர் நலனுக்கு ரூ.1,149.79 கோடி.
ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்ககம் அமைக்கப்படும்.
79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி.
27 நகரங்களில் பாதாளச் சாக்கடை திட்டங்கள்.
ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்.
சிங்கார சென்னை 2.0 துவக்கப்படும்.
ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்.
59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள்.
1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி.
17,980 மெகாவாட் மொத்த மின் உற்பத்தி திறன் கூடுதலாக்கப்படும்.
பள்ளிக் கல்விக்கு ரூ.32,599 கோடி.
865 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.
புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.
தமிழ்நாடு சித்தா பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.
45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கி தொகுப்புகள் உருவாக்கப்படும்.
திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள்.
கோயம்புத்தூரில் 500 ஏக்கரில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா.
பின்தங்கியுள்ள மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்.
600க்கும் மேற்பட்ட சேவைகள் மின்னணு மூலமாக வழங்கப்படும்.
12,959 திருக்கோவில்களில் ரூ.130 கோடியில் நிலை நிதி ஏற்படுத்தப்படும்.
பழனி திருக்கோவில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி துவக்கப்படும்.
மூன்றாம் பாலின மக்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.5 கோடி ஒதுக்கீடு