மதுரை:
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தடையின்றி கொண்டு வருவதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பெ.மூர்த்தி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். திங்களன்று நள்ளிரவு ஆக்சிஜன் லாரி வரும் வரை காத்திருந்து ஆக்சிஜனை நிரப்பும் வரை காத்திருந்தனர்.
இதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முயற்சி, ஆதரவின் காரணமாக 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மதுரைக்கு கிடைக்கப்பெற்றது. இதற்கு பெரும் பங்காற்றியவர் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக நிதியமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தான். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒன்றை ஒன்று இணைக்கும் சில உதிரி பாகங்கள் பொருந்தவில்லை. அப்பணியை பொறியாளரான பழனிவேல் தியாகராஜனே சரி செய்தார்.
மதுரைக்கு தேவையான ஆக்சிஜனில் உரிய அளவை, உரிய நேரத்தில் கொடுங்கள் என்று மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்ந்து தொடர்பு கொள்கின்றனர். மதுரையின் மக்கள் தலைவர்கள். அதே நேரத்தில் அருகாமை யிலுள்ள மாவட்டங்களும் இதே முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையில் மதுரையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பெ.மூர்த்தி, ராம்கோ சேர்மன், தியாகராஜர் மில் சேர்மன் கண்ணன், டிவிஎஸ், எச்சிஎல்பிரதிநிதிகள், சிறப்பு அதிகாரி சந்திரமோகன் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.